தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் தேதியைக் கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி அன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பிருந்தே இந்த ஐந்து மாநிலங்களிலுமே அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தங்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தனர். சில இடங்களில் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சத்தீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 7 ஆம் தேதி காலை 7 மணிக்குத் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று முடிந்தது. அதேபோல், மிசோரம் மாநிலத்திலும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
அதன்படி, மத்தியப் பிரதேசத்தில் உள்ள 230 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இன்று (17-11-23) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதேபோல் சத்தீஸ்கரில் 70 தொகுதிகளில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் சுமார் 64 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 17,000 வாக்குச் சாவடிகள் பதற்றமானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கூடுதலாக மத்திய துணைப் பாதுகாப்புப் படையினர் மற்றும் மத்தியப் பிரதேச போலீசார் பாதுகாப்புப் பணிக்காகக் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதில் மத்திய பிரதேச மாநிலம், ராஜ்நகர் தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்று வந்தது. அப்போது, காங்கிரஸ் கட்சியினருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது இரு தரப்பினரும் மாறி மாறி கற்களைக் கொண்டு தாக்கிக்க் கொண்டதால் வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறையில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் விக்ரம் சிங்கின் உதவியாளர் சல்மான் என்பவர் கொலை செய்யப்பட்டார். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து, காங்கிரஸ் வேட்பாளர் விக்ரம்சிங் செய்தியாளர்களைச் சந்தித்து பேசும் போது, “எனது உதவியாளர் சல்மான் கொலைக்கும் பா.ஜ.க வேட்பாளர் அரவிந்த் பட்டேரியாவுக்கும் தொடர்பு இருக்கிறது. மேலும், இந்த கொலை சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.