மகாராஸ்டிராவில் கடந்த ஜூலை மாதம் 2 ஆம் தேதி தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 8 பேர், பா.ஜ.க மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியில் இணைந்தனர். அதனை தொடர்ந்து, மகாராஸ்டிரா துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவி ஏற்றுக் கொண்டார். அவரது அணியைச் சேர்ந்த 8 பேர் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு நிதி மற்றும் திட்டமிடல் துறை வழங்கப்பட்டது. அதே போல், அவரது அணியைச் சேர்ந்த 8 அமைச்சர்களுக்கும் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன
இதையடுத்து, ஜூலை மாதம் 17 ஆம் தேதி தெற்கு மும்பையில் உள்ள ஓய்.பி.சவான் மண்டபத்தில் அஜித்பவாரும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சந்தித்தனர். சரத்பவாரை சந்தித்த பின், பிரபுல் பட்டேல் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அதில், கட்சியின் ஒற்றுமையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும்படி சரத்பவாரிடம் வலியுறுத்தியதாகக் கூறினார். அதனை தொடர்ந்து இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அஜித் பவார், சரத் பவாரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில், அஜித் பவார் மற்றும் சரத் பவார் இடையே சமீபத்தில் ரகசிய சந்திப்பு நடந்ததாக தகவல் வெளியாகி இருந்தது. அமைச்சரவை விரிவாக்கத்திற்கு பின்பு இருவரும் ரகசியமாக சந்தித்து கொண்டதாக கூறப்படுவது மகாராஷ்டிரா அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மகாராஷ்டிரா பீட் மாவட்டத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட சரத் பவார் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “மகா விகாஷ் அகாடி கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ் கட்சி இல்லாமல் காங்கிரஸோடு உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியும் இணைந்து தேர்தலை சந்திக்கப் போவதாக வந்த செய்திகள் அனைத்தும் தவறான செய்தியாகும். அஜித் பவார் என்னை சந்தித்து பேசினார். அது என்னுடைய தனிப்பட்ட குடும்ப விஷயம். அதை அரசியலாக்காதீர்கள். அஜித் பவாரை நான் சந்தித்ததை வைத்து கொண்டு பா.ஜ.க.வோடு கூட்டணி சேர இருப்பதாகக் கூறுவது அனைத்தும் வதந்தி. நான் ஒரு போதும் பா.ஜ.க. கட்சியில் இணைய மாட்டேன். 2024 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியுள்ளது. அதற்கான அனைத்து விதமான முயற்சிகளையும் எடுத்து வருகிறோம். கட்சி சின்னத்துக்கு உரிமை கோரிய விவகாரத்தில் தேர்தல் ஆணையம் அளித்துள்ள நோட்டீஸுக்கு பதில் அளித்துள்ளோம்.
மணிப்பூரில் கடந்த நான்கு மாதங்களாக நிலைமை மோசமடைந்துள்ளது. ஆனால், அதைப் பற்றி நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் முதல் நாளில் நாடாளுமன்றத்திற்கு வெளியே வெரும் 3 நிமிடம் தான் பிரதமர் பேசினார். நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் நீண்ட நேரமாக பதில் அளித்த பிரதமர் மோடி, மணிப்பூர் குறித்து சுருக்கமாகத்தான் குறிப்பிட்டிருந்தார். சுதந்திர தின உரையில் 5 நிமிடம் மட்டுமே பேசுகிறார். அவருக்கு வடகிழக்கு மாநிலங்கள் குறித்து கவலை இல்லை” என்று கூறினார்.