தமிழகத்தையொட்டியுள்ள புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. பாஜகவை சேர்ந்த நமச்சிவாயம் கல்வி அமைச்சராக இருக்கிறார். நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆலோசனை நடத்தினார் நமச்சிவாயம். ஆலோசனைக்கு பிறகு பேசிய அமைச்சர் நமச்சிவாயம், “நீட் தேர்வு என்பது மத்திய அரசின் கொள்கை முடிவு.
புதுவை அரசு, மத்திய அரசின் நிர்வாக கட்டமைப்பில் இயங்கும் ஓர் அரசு. அதனால் மத்திய அரசின் கொள்கை முடிவுக்கு புதுவை அரசு கட்டுப்பட வேண்டும். மத்திய அரசின் வழிகாட்டுதலில்தான் நாம் அரசை நடத்த முடியும். அந்த வகையில் புதுச்சேரியில் நீட் தேர்வு கட்டாயம் நடக்கும். நீட் தேர்வு இல்லை என வருகிற தகவல்களை நம்ப வேண்டாம். தனியார் பள்ளிகள் முழு கட்டணத்தை வசூலிக்க வலியுறுத்தி வருவதாக புகார்கள் வருகிறது. அந்த புகார்கள் கண்காணிக்கப்படுகின்றன. முழு கட்டணம் வசூலிக்க வலியுறுத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆன்லைன் மூலமாகத் தான் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என கல்வித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.