உலகின் மிக வேகமான 'மனித கால்குலேட்டர்’ என்ற பட்டத்தை ஹைதராபாத்தை சேர்ந்த நீலகண்ட பானு பிரகாஷ் என்ற 20 வயது இளைஞர் பெற்றுள்ளார்.
டெல்லி பல்கலைக்கழகத்தில் கணிதம் படித்துள்ள இவர், மின்னல் வேகத்தில் கணிதம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிப்பதில் வல்லவர். தனது கணித திறமையால் இதுவரை நான்கு உலக சாதனைகள், 50 லிம்கா சாதனைகள் படைத்துள்ள இவர், இந்திய சுதந்திர தினத்தன்று, மைண்ட் ஸ்போர்ட்ஸ் ஒலிம்பியாட்டில் நடந்த மனக் கணக்கீட்டுக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டார். இதில் மிக வேகமாக கணித சிக்கல்களுக்கு பதிலளித்து, உலகின் மிக வேகமான 'மனித கால்குலேட்டர்’ என்ற பட்டத்தை பெற்றார்.
இந்த போட்டியில், 13 நாடுகளைச் சேர்ந்த 30 பேர் கலந்து கொண்ட சூழலில், அனைவரையும் வீழ்த்தி முதலிடத்தை பிடித்துள்ளார் நீலகண்ட பானு பிரகாஷ். இந்த சாதனை குறித்து பேசியுள்ள அவர், "எனது மூளை, ஒரு கால்குலேட்டரின் வேகத்தை விட விரைவாக கணக்கிட்டது. உலக அளவிலான கணிதத்தில் இந்தியாவை முன்னிறுத்த நான் முயற்சி செய்தேன். நான் பங்குபெற்ற இந்த போட்டி, உடல்ரீதியான மற்ற விளையாட்டுகளுக்கு சமமானதாகவே இருந்தது. எனது திறனைப் பார்த்து அனைவரும் வியப்படைந்தனர். என்னைப் போல் மற்ற குழந்தைகளுக்கும் கணிதம் மீது ஆர்வம் ஏற்பட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.