புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணி 16 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து, கடந்த மே 7- ஆம் தேதி அன்று பிற்பகலில் துணை ஆளுநர் மாளிகையில் எளிமையாக நடைபெற்ற பதவியேற்பு விழாவில் புதுச்சேரியின் முதல்வராக நான்காவது முறையாக என்.ரங்கசாமி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் (பொறுப்பு) டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் பதவிப் பிரமாணத்தையும், ரகசிய காப்புப் பிரமாணத்தையும் செய்து வைத்தார்.
இந்த நிலையில் முதல்வர் ரங்கசாமிக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அவருக்கு கரோனா மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, முதல்வர் ரங்கசாமி உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றன.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ரங்கசாமியிடம் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் (பொறுப்பு) டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார். முதல்வர் ரங்கசாமி விரைவில் குணமடைந்து மக்கள் பணியாற்ற இறைவனைப் பிரார்த்திப்பதாக துணைநிலை ஆளுநர் (பொறுப்பு) தெரிவித்துள்ளார்.
இதனிடையே, முதல்வர் ரங்கசாமிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் (பொறுப்பு) டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அறிகுறி எதுவும் இல்லாத நிலையில் கரோனா பரிசோதனை செய்துகொண்டுள்ளார்.