புல்வாமா தாக்குதலுக்கு பதில் தாக்குதலாக இந்தியா பால்கோட் பகுதியில் தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை அழித்தது. அதனை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் எல்லை பகுதியில் பதட்டம் நிலவியது.
இந்த சண்டையில் தமிழகத்தை சேர்ந்த இந்திய வான்படை பைலட் அபிநந்தன் பாகிஸ்தானில் ராணுவத்தால் பிடிக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் இந்தியாவின் தாக்குதலில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என பாகிஸ்தான் தொடர்ந்து தெரிவித்து வந்தது.
இந்நிலையில் இந்தியா நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ள மரங்கள் ஏராளமாக அழிந்துவிட்டன என பாகிஸ்தான் ஐ.நா சபையில் இந்தியா மீது குற்றம் சாட்டியது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நவ்ஜோத் சிங் சித்து இது பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில், "300 பயங்கரவாதிகள் உயிரிழந்தார்களா. ஆம்? இல்லை?. இல்லை என்றால் தாக்குதலின் நோக்கம் என்ன?. நீங்கள் பயங்கரவாதத்தை வேரறுத்தீர்களா? அல்லது மரத்தின் வேரை அறுத்தீர்களா? இதில் தேர்தல் தந்திரம்? வெளிநாட்டு எதிரிக்கு எதிராக சண்டையிடுகிறோம் என்ற போர்வை ஒரு ஏமாற்று செயல். இந்திய ராணுவத்தை வைத்து அரசியல் செய்வதை நிறுத்துங்கள்" என பதிவிட்டுள்ளார்.