இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கொண்ட தொடர் நடவடிக்கையால், தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. மேலும், நாடு முழுவதும் முன்களப்பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசிப் போடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அனைவரும் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி நடிகர்கள், நடிகைகள் மற்றும் விளையாட்டு பிரபலங்கள், சமூக நல ஆர்வலர்கள் உள்ளிட்டோர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அதேசமயம், கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டால் பொதுமக்களுக்கு பரிசு பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், புதுச்சேரி மாநிலம், வில்லியனூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் வரும் ஜூன் 26- ஆம் தேதி கரோனா தடுப்பூசிப் போட்டுக் கொண்டால் பெட்ரோல் இலவசம் என்று தனியார் பெட்ரோல் பங்க் அறிவித்துள்ளது.
அந்த அறிவிப்பில், ஜூன் 26- ஆம் தேதி அன்று காலை 08.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை தடுப்பூசிப் போட்டுக்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் அரை லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும். அதேபோல், முன்களப்பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.