டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு பத்திரிகை அலுவலகம் அமலாக்கத் துறையால் சீல் வைக்கப்பட்டுள்ளது.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகை பங்கு விற்பனை விவகாரம் தொடர்பாக அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் செயல் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. அதன்படி இருவரும் ஆஜராகிய நிலையில் இருவரிடமும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.
இந்நிலையில் டெல்லி ஐடிஓ பகுதியில் உள்ள உள்ள நேஷனல் ஹெரால்டு பத்திரிகை அலுவலகத்திற்கு பல குழுக்களாக வந்த அமலாக்கத்துறையினர் 8 மணிநேரத்திற்கு மேலாக சோதனையில் ஈடுபட்ட நிலையில் சீல் வைக்கப்பட்டுள்ளது. இனி நேஷனல் ஹெரால்டு பத்திரிகை அலுவலகத்திற்குள் அமலாக்கத்துறையின் அனுமதியையும் பெறாமல் உள்ளே யாரும் வரக்கூடாது என நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமை அலுவலகம், ராகுல் காந்தி வீடு, சோனியா காந்தி வீடு ஆகிய இடங்களுக்கு செல்லக்கூடிய பாதைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் போராட்டம் நிகழ்வதை தடுக்கும் நடவடிக்கைகளில் போலீசார் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.