மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மராட்டிய மாநிலம் லதூரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், " நீங்கள் அனைவரும் காலை 9.30 மணி முதல் இங்கு காத்திருக்கிறீர்கள் என கேள்விப்பட்டேன். உங்களை இந்த காத்திருப்பை நான் வீணாக விடமாட்டேன். கடந்த 5 ஆண்டுகளில் உங்களின் நம்பிக்கையை பெற்றதுதான் எனது மிகப்பெரிய சாதனையாகும். காஷ்மீர் விவகாரத்தில், காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுவதும், பாகிஸ்தானின் நிலைப்பாடும் ஒன்றுதான். இதிலிருந்தே காங்கிரஸின் நிலைப்பாட்டை அறிய முடியும்.
பயங்கரவாதிகளை அவர்களின் இடத்திற்கே சென்று கொல்வதுதான் இந்தியாவின் புதிய கொள்கையாகும். பாகிஸ்தான் உருவாக காரணமே காங்கிரஸ் தான். சுதந்திரத்துக்கு முன்பு, அப்போதைய காங்கிரஸ் தலைவர் புத்திசாலித்தனமாக செயல்பட்டிருந்தால், பாகிஸ்தான் என்ற நாடே இருந்திருக்காது. ஆனால் இப்போதும் நமது பாதுகாப்பு அமைப்புகளை பலவீனப்படுத்தும் வகையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இருப்பது வெட்கப்படவேண்டியது" என கூறினார்.