18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 24 ஆம் தேதி (24.06.2024) காலை 11 மணியளவில் தொடங்கியது. இந்த கூட்டத் தொடரையொட்டி மக்களவைக்குப் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மக்களவை சபாநாயகர் தேர்தல் நேற்று (26.06.2024) நடைபெற்றது. இதில் பாஜகவின் ஓம் பிர்லா, காங்கிரசின் கொடிக்குன்னில் சுரேஷ் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றுகையில், “பிரதமர் கிசான் சம்மன் நிதியின் கீழ் நாட்டின் விவசாயிகளுக்கு அரசு சார்பில் ரூ. 3.20 லட்சம் கோடியை வழங்கியுள்ளது. இந்த அரசாங்கத்தின் மூலம் ரூ. 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினத்தை கொண்டாடியதை பார்த்திருப்பீர்கள். வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்காக கடந்த 10 ஆண்டுகளில் அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீட்டை 4 மடங்குக்கு மேல் உயர்த்தியுள்ளது. வடகிழக்கு மாநிலங்களின் அனைத்து விதமான இணைப்புகளும் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன. வடகிழக்கில் அமைதியை ஏற்படுத்த அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில், பல பழைய பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு, பல ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு அங்கு வேகமாக பொருளாதாரம் முன்னேறி வருகிறது.
நாட்டின் ஏழைகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் விவசாயிகள் அதிகாரம் பெற்றால் மட்டுமே வளர்ந்த இந்தியாவைக் கட்டியெழுப்ப முடியும். எனவே அவர்களுக்கு எனது அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. 25 கோடி இந்தியர்களுக்கு அரசின் திட்டங்களில் இருந்து ஒருவர் கூட விடுபடக்கூடாது என்ற மன உறுதியுடன் ஒவ்வொரு அரசுத் திட்டத்தின் பலனையும் அவர்களுக்கு வழங்குவதே நோக்கம் ஆகும். கடந்த 10 ஆண்டுகளில் வறுமையில் உள்ள சகோதர சகோதரிகளுக்கு உதவிகளை உருவாக்கி வருகிறது. டிஜிட்டல் இந்தியா, தபால் அலுவலகங்களின் நெட்வொர்க், தூய்மை இந்தியாதிட்டம் ஏழைகளின் வாழ்க்கை மற்றும் அவர்களின் ஆரோக்கியம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாக மாற்றப்பட்டுள்ளது. முதல் முறையாக, கோடிக்கணக்கான ஏழைகளுக்கு கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
திறமையான இந்தியாவிற்கு நமது ஆயுதப் படைகளில் நவீனத்துவம் அவசியம். போரை எதிர்கொள்வதில் நாம் சிறந்தவர்களாக இருக்க வேண்டும். இதை உறுதிப்படுத்த, ஆயுதப் படைகளில் சீர்திருத்த செயல்முறைகள் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். அரசாங்கம் கடந்த 10 ஆண்டுகளில் பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்தது. சீர்திருத்தங்களால், இந்தியா ரூ. 1 லட்சம் கோடிக்கு மேல் பாதுகாப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் நமது பாதுகாப்பு ஏற்றுமதி 18 மடங்கு அதிகரித்து ரூ.21 ஆயிரம் கோடியைத் தொட்டுள்ளது.
70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் அனைவருக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சையின் பலன் கிடைக்கும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட உள்ளன. கடந்த 10 ஆண்டுகளில், இதுபோன்ற பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அவை இன்று நாட்டிற்கு பயனளிக்கின்றன. இந்த சீர்திருத்தங்கள் செய்யப்படும்போது அவர்கள் அதனை எதிர்த்தனர். இன்று ஜிஎஸ்டி இந்தியாவின் பொருளாதாரத்தை முறைப்படுத்தவும், வர்த்தகம் மற்றும் வணிகத்தை எளிதாக்கவும் ஒரு ஊடகத்தை உருவாக்குகிறது. ஏப்ரல் மாதத்தில் முதல் முறையாக ஜிஎஸ்டி வசூல் ரூ.2 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. இதனால் மாநிலங்களின் லாபம் அதிகரித்துள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் அகதிகளுக்குக் குடியுரிமை வழங்கத் தொடங்கியுள்ளது. எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளுடன் இந்தியாவின் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் மீண்டும் நிலைநாட்டி வருகிறது. சமீபத்தில், நாளந்தா பல்கலைக்கழகத்தின் தொழிற்கல்வி வளாகம் என்ற வடிவத்தில் ஒரு புதிய அத்தியாயம் சேர்க்கப்பட்டுள்ளது. நாளந்தா ஒரு பல்கலைக்கழகம் மட்டுமல்ல, அடிப்படை அறிவு மையமாக இந்தியாவின் புகழ்பெற்ற கடந்த காலத்தின் சான்றாகும். புதிய நாளந்தா பல்கலைக்கழகம் இந்தியாவை உலகளாவிய அறிவு மையமாக மாற்ற உதவும் என்று நான் நம்புகிறேன்” எனப் பேசினார்.
முன்னதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சிபிஐ கைது செய்ததையும், மத்திய அரசு விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்துவதையும் கண்டித்து ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் மற்றும் பிற கட்சித் தலைவர்கள் நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியே போராட்டம் நடத்தினர். குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையாற்றியபோது எதிர்க்கட்சிகள் மணிப்பூர், மணிப்பூர் என்று முழக்கம் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.