மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே மிராரோடு பகுதியைச் சேர்ந்தவர் பாத்திமா காதுன் (31). இஸ்லாமிய வகுப்பைச் சேர்ந்த இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்த நிலையில், இவர் கடந்த 6ஆம் தேதி தனது கணவர் தய்யாபுடன் கோலாப்பூரில் இருந்து மும்பைக்கு மகாலஷ்சுமி எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்து கொண்டிருந்தார்.
ரெயில் இரவு 11 மணியளவில் லோனாவாலா பகுதிக்கு வந்து கொண்டிருந்த போது பாத்திமா கழிவறை செல்வதற்காக சென்றார். அப்போது பாத்திமாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதில் பதற்றமடைந்த கணவர் தய்யாப் உதவிக்காக சக பெண் பயணிகளை அழைத்துள்ளார். இதனையடுத்து அங்கிருந்த பெண் பயணிகள் பாத்திமாவுக்கு உதவி செய்தனர். அதில் அங்கேயே அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து உடனடியாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் கர்ஜத் ரெயில்வே நிலையத்தில் காத்து கொண்டிருந்தனர். இதனையடுத்து, ரயில் கர்ஜத் ரயில்வே நிலையத்தில் வந்தவுடன், தாய் மற்றும் குழந்தையை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த நிலையில், மகாலஷ்சுமி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பிறந்த பெண் குழந்தைக்கு ‘மகாலஷ்சுமி’ என்று பெயரை பெற்றோர் சூட்டியுள்ளனர். இஸ்லாமிய குழந்தைக்கு இந்து கடவுளின் பெயரை வைத்தது குறித்து தந்தை தய்யாப் கூறுகையில், “என்ஜின் கோளாறு காரணமாக லோனாவ்லாவில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ரயில் நிறுத்தப்பட்டது. இரவு 11 மணியளவில் மீண்டும் துவங்கியதும், என் மனைவி வயிற்று வலி இருப்பதாக கூறி, கழிவறைக்கு சென்றார். நேரமாகியும் அவர் திரும்பி வராததால், தேடி சென்று பார்த்த போது, பிரசவ வலியால் துடித்து கொண்டிருந்தார். பெண் பயணிகள் எங்களுக்கு உதவி செய்தனர். இதனையடுத்து எங்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. திருப்பதியில் இருந்து கோலாப்பூரில் உள்ள மகாலட்சுமி கோவிலுக்கு சென்ற சில சக பயணிகள், இந்த ரயிலில் எனது மகள் பிறந்தது மகாலஷ்சுமி அம்மனை தரிசனம் செய்தது போல் உள்ளது என்று கூறினர். அதனால் குழந்தைக்கு மகாலட்சுமி என்று பெயர் சூட்டினேன்” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.