Skip to main content

இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று எப்படி இருக்கும்? கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்!

Published on 15/06/2020 | Edited on 15/06/2020

 

mumbai stock market nifty, sensex


கடந்த வாரத்தின் கடைசி வர்த்தக தினமான ஜூன் 12- ஆம் தேதி, தேசிய பங்குச்சந்தையும் (நிப்டி), மும்பை பங்குச்சந்தையும் (சென்செக்ஸ்) சரிவிலிருந்து ஓரளவு எழுச்சியுடன் முடிவடைந்தன. எனினும், நடப்பு வாரத்தில் அமெரிக்க, ஐரோப்பிய பங்குச்சந்தைகளின் ஏற்ற, இறக்கங்களைப் பொருத்தே இந்தியப் பங்குச்சந்தைகளின் வர்த்தகம் அமையும் என்பதோடு, இனி வரும் காலங்களிலும் சந்தையில் நிலையற்ற தன்மையே காணப்படும் என்கிறார்கள் நிபுணர்கள்.
 


நடப்பு வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று (ஜூன் 15), நிப்டி இண்டெக்ஸ் 10,000 புள்ளிகளைக் கடந்து வர்த்தகம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இன்ட்ராடே வர்த்தகத்தில் ஈடுபடும் முதலீட்டாளர்களுக்கு ஓரளவு நம்பிக்கையான அம்சம்தான் என்கிறார்கள்.

''கடந்த வெள்ளியன்று நிப்டியில் துவக்கநிலை வர்த்தகமே குறைந்தபட்சமாக 9544 புள்ளிகளில் தொடங்கியது. இந்த வாரத்தில் நிப்டி இண்டெக்ஸ் 10328 புள்ளிகள் வரை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உயர்வு குறுகிய கால ஆதாயம் எதிர்நோக்கும் முதலீட்டாளர்களுக்கு லாபம் கொடுக்கும்,'' என்கிறது ஷேர்கான் பங்குத்தரகு நிறுவனம். 

கிட்டத்தட்ட இதே கருத்தைக் கூறும் சாய்ஸ் புரோக்கிங் நிறுவனம், நடப்பு வாரத்தில் சராசரியாக 10100 புள்ளிகளில் நிப்டி வர்த்தகம் ஆகும் என்கிறது.

கடந்த வெள்ளியன்று அமெரிக்க, ஐரோப்பிய பங்குசந்தைகளும் சரிவில் இருந்து ஓரளவு மீண்டு வந்தன. அதன் தாக்கம்தான் இந்திய பங்குச்சந்தைகளிலும் அன்றைய தினம் எதிரொலித்தன. அதனால்தான் அன்று ஆரம்பத்தில் சரிவில் இருந்த நிப்டி மற்றும் சென்செக்ஸ், முதல் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு மெல்ல மெல்ல ஏற்றம் கண்டதாகச் சொல்கிறார்கள் நிபுணர்கள்.

சந்தையில் நிலையற்ற தன்மை நிலவுவதால், ஒரு வார கால அடிப்படையில் பங்குகளை வாங்கி வைத்திருந்து விற்பனை செய்யும் திட்டத்தில் இருக்கும் முதலீட்டாளர்களுக்கு, அவ்வளவு லாபகரமானதாக இருக்காது என்றும் எச்சரிக்கின்றனர். அன்றாட நடவடிக்கைகளை அனுசரித்து வர்த்தகத்தில் ஈடுபடுவதே இந்த வாரத்தில் புத்திசாலித்தனமாக இருக்கும்.

கடந்த வெள்ளியன்று குறிப்பிட்ட சில பங்குகள் மீது முதலீட்டாளர்களின் அதிக கவனம் செலுத்தினர். குறிப்பாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஸ்ரீ திக்விஜய், ஜூபிலன்ட் புட் ஒர்க்ஸ், எல்பிசிஏ லேபாரட்டரீஸ், கோகுல் ரீபாய்ல்ஸ் நிறுவனங்களின் பங்குகளில் முதலீட்டாளர்கள் அதிக கவனம் செலுத்தினர்.
 

 

 

mumbai stock market nifty, sensex


கரடியின் பிடியில் உள்ள பங்குகள்: 

சந்தையின் நிலையற்றத் தன்மை காரணாக இதற்கு முன் ஆதாயம் அளித்த பல முக்கிய பங்குகள் தற்போது கரடியின் பிடியில் சிக்கி இறக்கத்தில் இருக்கின்றன. 

அந்த வகையில், ஐடிசி, செயில், அதானி பவர், இன்போசிஸ், ஜிண்டால் ஸ்டீல் ஒர்க்ஸ், அரபிந்தோ பார்மா, அதானி போர்ட்ஸ், டிசிஎஸ், லூபின், ஸ்டெர்லைட் டெக்னாலஜீஸ், பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ், மிஸ்ரா தாட்டு நிகாம், இண்டியன் எனர்ஜி எக்ஸ்சேஞ்ச், என்ஐஐடி லிமிடெட், ராம்கோ சிமெண்ட்ஸ், இர்கான் இண்டர்நேஷனல், டிக்ஸான் டெக்னாலஜீஸ், வி&கார்டு, ரிபெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பஜாஜ் எலக்ட்ரிகல்ஸ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் கடும் சரிவை சந்திக்கக் கூடும் என சந்தை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். 

அதிக கவனம் பெற்ற பங்குகள்:

அதேபோல், நிப்டியில் கடந்த வாரம் குறிப்பிட்ட பல பங்குகளில் முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டினர். பஜாஜ் பைனான்ஸ் (ரூ.3960 கோடி), இண்டஸ் இந்த் வங்கி (ரூ.2911 கோடி), ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (ரூ.2760 கோடி), ஹெச்டிஎப்சி (ரூ.2045 கோடி), ஆக்சிஸ் வங்கி (ரூ.1918 கோடி), பாரத ஸ்டேட் வங்கி (ரூ.1618 கோடி), ஐசிஐசிஐ வங்கி (ரூ.1592 கோடி), வோடபோன் ஐடியா (ரூ.1410 கோடி), ஆர்பிஎல் வங்கி (ரூ.1328 கோடி), கோடக் வங்கி (ரூ.1133 கோடி) ஆகிய பங்குகள் கடந்த வாரம் தலால் தெருவில் முதலீட்டாளர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்து இருந்தன.

எண்ணிக்கை அளவில் அதிக முதலீடு பெற்ற பங்குகள்:
அளவு அடிப்படையில் சில குறிப்பிட்ட பங்குகளில் முதலீட்டாளர்கள் கடந்த வாரம் அதிகளவில் கவனம் செலுத்தினர். அதாவது, வாங்கியது, விற்றது இரண்டும் இவற்றில் அடங்கும்.

அதன்படி, வோடபோன் ஐடியா (150 கோடி பங்குகள்), டாடா மோட்டார்ஸ் (9.29 கோடி பங்குகள்), பாரத ஸ்டேட் வங்கி (9.27 கோடி பங்குகள்), ஆர்பிஎல் வங்கி (8.35 கோடி பங்குகள்), பெல் (7.30 கோடி), ஐடிஎப்சி பர்ஸ்ட் வங்கி (7.10 கோடி), இண்டஸ் இந்த் வங்கி (5.74 கோடி), பஞ்சாப் நேஷனல் வங்கி (5.16 கோடி), பெடரல் வங்கி (5 கோடி), அசோஷ் லேலண்ட் (4.81 கோடி) ஆகிய பங்குகள் அதிகளவில் வர்த்தகம் ஆயின.

ஆர்வம் உள்ள பங்குகள்:

முதலீட்டாளர்கள் நீண்டகாலப் போக்கில் வாங்குவதற்கு சில பங்குகளில் ஆர்வம் காட்டுகின்றனர். கிரானியுல்ஸ் இண்டியா, நெட்வொர்க்18 மீடியா,ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ், ஆலோக் இண்டஸ்ட்ரீஸ், வைபவ் குளோபல் ஆகிய பங்குகள் கடந்த 52 வார உச்ச நிலையை எட்டியிருக்கின்றன. அதனால் இப்பங்குகளில் முதலீட்டாளர்கள் மேலும் முதலீடு செய்ய ஆர்வம் செலுத்துகின்றனர்.
 

http://onelink.to/nknapp


அதேநேரம் ஐஎல் அண்டு எப்எஸ் மற்றும் ராஜேஷ் எக்ஸ்போர்ட் பங்குகள் 52 வார குறைந்தபட்ச விலைக்குச் சென்றதால் இப்போதைக்கு அப்பங்குகளை விற்று விடுவதே நட்டத்தில் இருந்து மீள வழிவகுக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.

என்றாலும், ஒட்டுமொத்த அளவில் பார்க்கையில், கடந்த வார இறுதியில் நிப்டி&500ல் 235 பங்குகள் ஆதாயத்திலும், 259 பங்குகள் சரிவிலும் இருந்தது நல்ல அறிகுறிகள் என்று சொல்ல முடியாது என்றே கணிக்கின்றன பங்குச்சந்தை தரகு நிறுவனங்கள்.

ஆகையால், மேலே சொல்லப்பட்ட அம்சங்களைக் கவனத்தில் கொண்டு நடப்பு வாரத்தில் செயல்படலாம் என்றும் சொல்கிறார்கள் நிபுணர்கள்.


 

சார்ந்த செய்திகள்