ரயில் விபத்து தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் நேற்று முன்தினம் இரவு மூன்று ரயில்களுக்கு இடையே ஏற்பட்ட விபத்தின் காரணமாக தற்போது வரை 294 பேர் இறந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்களுக்கு தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே விபத்தில் சிக்கிய தமிழர்களை தமிழ்நாட்டிற்கு மீட்டுக்கொண்டு வரும் பணியும் வேகமாக நடந்து வருகிறது. ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சிறப்பு ரயில் மூலம் சென்னை வந்தடைந்தனர்.
இந்த ரயில் விபத்துக்கு மத்திய அரசின் அலட்சியமே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. மேலும் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என்றும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் ரயில் விபத்து தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. ரயில்வே துறையில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்க உத்தரவிடக் கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி, ரயில்வே நிபுணர்கள் அடங்கிய குழு மூலம் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டன.