Skip to main content

பங்குச்சந்தை: கரடியைச் சாய்த்த காளை! முதலீட்டாளர்கள் ஹேப்பி அண்ணாச்சி!

Published on 13/06/2020 | Edited on 13/06/2020

 

mumbai share market sensex, nifty investors


கரோனா தொற்றால் உலக பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட சுணக்கம், இந்தியப் பங்குச்சந்தைகளிலும் எதிரொலிக்கும் என்று நாம் நேற்றே சொல்லி இருந்தோம். வாரத்தின் இறுதி வர்த்தக நாளான நேற்று (ஜூன் 12), துவக்கத்தில் கரடியின் பிடியில் சிக்கி, கடும் சரிவைச் சந்தித்த இந்தியப் பங்குச்சந்தைகள், படிப்படியாகக் கரடியை வீழ்த்தி காளையாக மீண்டெழுந்தது.
 


விழுந்து எழுந்த சென்செக்ஸ்:

நேற்று முன்தினம் (ஜூன் 11), மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 33538 புள்ளிகளுடன் முடிவடைந்து இருந்தது. சந்தை ஆய்வாளர்கள் எச்சரித்தது போலவே நேற்று வர்த்தகத்தின் துவக்கத்திலேயே முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில், சென்செக்ஸ் வர்த்தகமே 32,436 புள்ளிகளில்தான் துவங்கியது. அதாவது, முந்தைய நாள் முடிவைக் காட்டிலும் இது 1,102 புள்ளிகள் வீழ்ச்சி ஆகும்.

வர்த்தகம் தொடங்கிய முதல் இரண்டு மணி நேரத்தில் பெரிய முன்னேற்றம் இல்லாததால் முதலீட்டாளர்கள் உற்சாகம் இழந்தனர். எனினும், நீண்ட கால முதலீடுகளுக்கு இப்போதைய சூழல் உகந்தது என்ற கருத்து நிலவியதால், அதன்பிறகு சென்செக்ஸ் படிப்படியாக முன்னேற்றம் கண்டது. குறைந்தபட்ச அளவாக 32,348 புள்ளிகளுக்குச் சென்ற சென்செக்ஸ், இறுதியில் 33,780 புள்ளிகளில் நிறைவடைந்தது. இது முந்தைய நாள் நிறைவடைந்த புள்ளிகளைக் காட்டிலும் இது 242.52 உயர்வு ஆகும். அதேநேரம், நேற்று ஒரே நாளில் சென்செக்ஸில் ஆரம்ப நேர இண்டெக்ஸூடன் ஒப்பிடுகையில் 1,102 புள்ளிகள் அதிகரித்து இருப்பது முதலீட்டாளர்களிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. சென்செக்ஸில் பட்டியலிடப்பட்டுள்ள 30 முக்கியப் பங்குகளில், 17 பங்குகளின் விலைகள் கணிசமாக ஏறியிருந்தன. 13 பங்குகளின் விலைகள் வீழ்ச்சி அடைந்தன. 
 

mumbai share market sensex, nifty investors


பி.எஸ்.இ. சந்தையில், நேற்று வணிகத்தில் ஈடுபட்ட 2,653 நிறுவனங்களில், 1,235 நிறுவனப் பங்குகள் ஓரளவு முன்னேற்றம் கண்டிருந்தன. 1,264 பங்குகளின் மதிப்பு சரிவடைந்தன. இந்த ஏற்ற, இறக்கத்திலும் 51 நிறுவனங்களின் பங்குகள் கடந்த 52 வார உச்சத்தைத் தொட்டு இருந்தன. 53 பங்குகள், ஓராண்டின் குறைந்தபட்ச விலைக்குச் சென்றன. 288 பங்குகள் அதிகபட்ச விலையை எட்டியிருந்தன. 


நிப்டி நிலவரம்:

தேசிய பங்குச்சந்தையான நிப்டியும், துவக்கத்தில் சரிவுடனேயே (9,544 புள்ளிகள்) வர்த்தகத்தைத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் சரிவில் இருந்து மீண்டு முன்னேற்றம் கண்ட நிப்டி 10,000 புள்ளிகளைத் தொட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 9,972.90 புள்ளிகளில் நிறைவடைந்தது. இச்சந்தையில் வர்த்தக நிலையைக் கணக்கிட உதவும் 50 பங்குகளில், 29 நிறுவனப் பங்குகளின் விலைகள் சற்று ஏற்றம் கண்டிருந்தன. 20 பங்குகளின் மதிப்பு வீழ்ச்சி அடைந்தன. ஒரு பங்கின் விலையில் மாற்றங்கள் இல்லாமல் இருந்தது.

நிப்டியில் மஹிந்திரா அண்டு மஹிந்திரா (7.57%), இன்பிராடெல் (6.45%), ஸ்ரீ சிமெண்ட் (5.82%), பஜாஜ் பைனான்ஸ் (4.46%), ஹீரோ மோட்டார்ஸ் (3.90%) ஆகிய பங்குகள், இன்ட்ராடே வர்த்தகத்தில் ஈடுபடும் முதலீட்டாளர்களுக்கு ஓரளவு லாபத்தைக் கொடுத்தன. ஸீ என்டர்யெயிண்மென்ட், ஓ.என்.ஜி.சி., டெக் மஹிந்திரா, பவர் கிரிட், விப்ரோ பங்குகள் சரிவை சந்தித்தன. 
 

mumbai share market sensex, nifty investors


ஒட்டுமொத்த அளவில் நிப்டியில் நேற்று வர்த்தகத்தில் ஈடுபட்ட 1,912 நிறுவனங்களில் 942 பங்குகள் ஓரளவு வளர்ச்சி கண்டிருந்தன. 903 பங்குகளின் விலைகள் சரிவடைந்து இருந்தன. 67 பங்குகளின் மதிப்பில் எந்த மாற்றமும் இல்லை.

உலகளவில் பார்க்கையில், அமெரிக்க பங்குச்சந்தையான நாஸ்டாக் (0.56%), மற்றும் எப்.டி.எஸ்.இ. (0.47%), சி.ஏ.சி. (0.49) ஆகிய ஐரோப்பிய பங்குச்சந்தைகளும் அடுத்தடுத்த செஸ்ஸன்களில் லேசாக வளர்ச்சி கண்டன. அதனால்தான் இந்தியப் பங்குச்சந்தைகளும் ஆரம்பத்தில் இறக்கத்துடன் தொடங்கினாலும் நேரம் செல்லச்செல்ல லேசான உயர்வைச் சந்தித்தன.
 

http://onelink.to/nknapp


கரோனா தொற்றால் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவு காரணமாக, பங்குச்சந்தைகளில் ஸ்திரமற்ற தன்மை காணப்படுகிறது. இதனால், முதலீட்டாளர்களிடையே விற்கும் ஆர்வம் அதிகரித்ததால், நேற்று வர்த்தகம் தொடங்கிய முதல் இரண்டு மணி நேரத்திற்கு மந்த நிலையிலேயே காணப்பட்டது என்கிறார்கள் நிபுணர்கள். இது ஒருபக்கம் இருக்க, வரும் வாரத்தில் நிப்டி 10,160 முதல் 10,250 புள்ளிகள் வரை உயரக்கூடும் என்றும் பங்குச்சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர். இது, முதலீட்டாளர்களிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. 

 

சார்ந்த செய்திகள்