இன்றைய காலகட்டத்தில் ஒருவர் எவ்வளவுதான் உழைத்தாலும் மாத வருமானம் ரூ. 30 ஆயிரத்தை தாண்டுவதே கடினமாக இருக்கும் சூழலில், ஒருவர் வேலைக்கே செல்லாமல், பிச்சை எடுத்தே பணக்காரராகியிருக்கிறார்.
மும்பையைச் சேர்ந்த பாரத் ஜெயின்(54) என்பவர் அங்குள்ள சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்திற்கு வரும் மக்களிடையே யாசகம் பெற்று(பிச்சை எடுத்து) தனது வாழ்கையை நடத்தி வருகிறார். அவர் ஒரு நாளைக்கு 10 முதல் 12 மணி நேரம் வரை பிச்சை எடுக்கும் தொழில் செய்து வருகிறார். இதன் மூலம் தினமும் ரூ.2,000 முதல், 2,500 வரை பணம் கிடக்கும் என்று கூறப்படுகிறது.
பாரத் ஜெயின் ஒரு ரூபாய் கொடுத்தாலும், மகிழ்ச்சியுடனே வாங்கி வைத்து கொள்வாராம். இப்படியாக ஒரு மாதத்திற்கு ரூ.70 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரை சம்பாதித்துள்ளார். மாத வருமானமே இப்படி இருக்கையில் அவரின் சொத்து மதிப்பு தற்போது, ரூ.7 கோடிக்கும் மேல் இருக்கிறதாம். பிச்சை எடுப்பதன் மூலம் வரும் பணத்தில் மும்பையில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் சொந்தமாக வீடு ஒன்றையும் வாங்கி தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.
இதையடுத்து, இரு கடைகளை விலைக்கு வாங்கிய பாரத் ஜெயின், அதனை வாடைக்கு விட்டு அதன் மூலம் ரூ.30 ஆயிரம் வரை சம்பாதிக்கிறாராம். மேலும் அவரது இரண்டு பிள்ளைகளையும் தனியார் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து வருகிறார். குடும்பம் பொருளாதாரம் தான் நல்ல நிலைக்கு வந்துள்ளதே, இனிமே பிச்சை எடுக்க வேண்டாம் என்று குடும்பத்தினர் அறிவுறுத்தியுள்ளனர். ஆனாலும் பாரத் ஜெயின் தொடர்ந்து பிச்சை எடுக்கும் தொழிலையே செய்து கொண்டிருக்கிறார்.
இது குறித்து அவரிடம் கேட்ட போது, “நான் சாதாரணமான வாழ்க்கை தான் வாழ்கிறேன்; கோவிலுக்கு கூட காணிக்கை வழங்குகிறேன். நான் பேராசைக்காரன் கிடையாது” என்றார். மேலும், “என்னுடைய நிகழ்வை படித்துவிட்டு நீங்களும் பிச்சை எடுக்கலாம் என்று நினைப்பீர்கள்; ஆனால் அதுவும் கூட எளிமையானது அல்ல, கடினம்தான்” என்றார்.
இவரைப் போன்றே மும்பையை சேர்ந்த சம்பாஜி காலே என்ற பிச்சைக்காரர் ரூ.1.50 கோடி மதிப்புள்ள சொத்துகளையும், மற்றொரு பிச்சைக்காரரான லட்சுமி தாஸ் ரூ.1 கோடி மதிப்புள்ள சொத்துகளையும் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பிச்சை எடுக்கும் தொழில் இந்தியாவில் மட்டும் ரூ.1லட்சத்து 50 ஆயிரம் கோடி வருமானம் புரள்கிறதாக கூறப்படுகிறது.