ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.
நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்தப் பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.
தாலி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பிரதமர் மோடியின் பேச்சுக்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மனைவியும், எம்.பியுமான டிம்பிள் யாதவ் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, “மங்களசூத்திரம் பற்றி பேசுபவர்கள் புல்வாமா சம்பவத்தையும் பேச வேண்டும். நமது வீரர்கள் வீரமரணம் அடைந்தனர், அவர்களின் மனைவிகளின் மங்களசூத்திரம் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டது. புல்வாமா சம்பவத்திற்கு யார் காரணம் என்று இவர்கள் பதில் சொல்ல வேண்டும். இந்தச் சம்பவத்திற்கு அரசு என்ன செய்தது?” எனக் கூறினார்.