கேரள மாநிலம், வைக்கத்தில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி முன்னிலையில், ‘வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியார் நூற்றாண்டு நிறைவு விழா’ இன்று (12.12.2024) நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார். மேலும் புதுப்பிக்கப்பட்ட தந்தை பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். அதோடு 2024ஆம் ஆண்டிற்கான வைக்கம் விருதை கர்நாடக மாநிலம், மைசூரு மாவட்டத்தை சேர்ந்த எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான தேவநூர மஹாதேவாவுக்கு வழங்கி சிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில் முதலில் மலையாளத்தில் பேச ஆரம்பித்தார். அப்போது அவர் பேசுகையில், “இன்னு சரித்திரத்திண்டே ஏடுகளில், தங்க - லிபிகளில் ரேகப்பெடுத்தேண்ட திவசமாணு. ப்ரவேஷனம் நிஷேதிகப்பெட்ட வைக்கத்து தந்தை பெரியாரினு நம்மள் ஒரு ஸ்மாரகம் நிர்மிச்சிட் - உண்டு. ஒரிக்கல், தந்தை பெரியாரினெ அரெஸ்ட்டு செய்து, ஜெயிலில் அடைச்ச வைக்கத்து - தன்ளெயாணு தமிழ்நாடு, கேரள சர்க்காருகளுடெ பேரில் நம்மள் ஆகோஷிக்குன்னது” எனப் பேசினார். அதாவது இன்று வரலாற்றின் பக்கங்களில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நாள். எந்த வைக்கம் நகருக்குள் நுழையக் கூடாது என்று தந்தை பெரியார் தடுக்கப்பட்டாரோ எந்த வைக்கம் நகரில் கைது செய்யப்பட்டாரோ, அதே வைக்கம் நகரில் இன்று மாபெரும் நினைவகத்தை எழுப்பி, தமிழ்நாடு மற்றும் கேரள அரசுகளின் சார்பில் மாபெரும் விழாவை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம் எனபது அதன் தமிழாக்கம் ஆகும்.
தொடர்ந்து தமிழில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “தந்தை பெரியாருக்கு எதிராக யாகம் நடந்த ஊரில், இன்றைக்கு புகழ்மாலை சூட்டியிருக்கக்கூடிய நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுதான் பெரியாரின் வெற்றி. பெரியாரியத்தின் வெற்றி. திராவிட இயக்கத்தின் வெற்றி. அந்த வகையில் சமூகநீதியின் வரலாற்றிலும், இந்த நாள் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படும். பெரியார் தொடங்கிய திராவிடர் கழகத்தின் தலைவர் கி.விரமணி முன்னிலையில், பேரறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்ட திமுகவின் தலைவரான நான், தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற பொறுப்புடன் இந்த நினைவகத்தை திறந்து வைப்பதில், எனக்குக் கிடைத்திருக்கிற மிகப்பெரிய வரலாற்றுப் பெருமையாக அமைந்திருக்கிறது.
இந்த நேரத்தில், என் நெஞ்சின் அடி ஆழத்தில் ஒரு சின்ன வருத்தம் ஏற்பட்டிருக்கிறது. அது என்னவென்றால், இந்தக் காட்சியைக் காண கலைஞர் நம்மிடையே இல்லையே என்ற எண்ணம்தான் அந்த வருத்தத்திற்குக் காரணம், கடந்த ஆண்டு மார்ச் மாதம் 6ஆம் நாள், தோள்சீலைப் போராட்டத்தோடு 200ஆவது ஆண்டு விழா நாகர்கோயிலில் நடந்தது. நானும், சகாவு பினராயி விஜயனும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம். வைக்கம் நூற்றாண்டு விழாவை மிகச் சிறப்பாக நடத்த வேண்டும் என்று நான் குறிப்பிட்டு பேசினேன். 2023ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி கேரள அரசின் சார்பில் மிகச் சிறப்பான விழாவை ஏற்பாடு செய்து, என்னையும் அழைத்திருந்தார் முதலமைச்சர் பினராயி விஜயன். இப்போது எங்களுடைய அழைப்பை ஏற்று பினராயி விஜயன்இங்கு இப்போது வருகை தந்திருக்கிறார்” எனப் பேசினார்.
இவ்விழாவில், தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, மு.பெ. சாமிநாதன், கேரள அமைச்சர்கள் வி.என். வாசவன், சஜி செரியன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே. பிரான்சிஸ் ஜார்ஜ், தொல். திருமாவளவன், வைக்கம் சட்டமன்ற உறுப்பினர் சி.கே. ஆஷா, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், கேரள மாநில அரசின் தலைமைச் செயலாளர் சாரதா முரளிதரன், கோட்டயம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜான் வி. சாமுவேல், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.