‘அரசியல் சடுகுடு’ என்ற தலைப்பில் நக்கீரன் நடத்தி வரும் நேர்காணலில் அரசியல் தொடர்பான பல்வேறு கருத்துகளை அரசியல் விமர்சகர்கள் பலர் பேசி வருகின்றனர். அந்த வகையில் முனைவர் இராம சுப்பிரமணியன், அண்மையில் அரசியல் தளங்களில் நடந்த நிகழ்வுகளை குறித்தும் ஃபெஞ்சல் புயல் பாதிப்பில் தமிழக அரசை விமர்சித்துப் பல அரசியல் தலைவர்கள் பேசியது குறித்தும் தனது கருத்துகளை நம்மிடையே பகிர்ந்துள்ளார்.
இனி வரும் காலங்களில் இயற்கை சீற்றம் என்பது அதிகமாகத்தான் இருக்கும். நான் பல நாடுகளில் இருக்கும்போது பயங்கரமான இயற்கை சீற்றங்களை பார்த்திருக்கிறேன். குறிப்பாக அமெரிக்கா, லண்டன் போன்ற பகுதிகளில் கடுமையான இயற்கை பேரிடர் நடந்திருக்கிறது. சமீபத்தில் சவுதி அரேபியா, துபாய் போன்ற இடங்களில் புயல் காற்றுடன் மழை பெய்து பாலைவனத்தில் நீர் ஆறாக ஓடியது. இதையெல்லாம் யாரால் கணிக்க முடிந்தது? எதற்காக இதைச் சொல்லுகிறேன் என்றால் இதுபோன்ற பேரிடர்கள் இயற்கையாக நடக்கத்தான் செய்யும். இயற்கை சீற்றம் வருவதற்கு முன்பே கணிக்கப்படுவதை ஓரளவிற்கு தான் நம்ப முடியும். ஆனால் முழுமையாக நம்ப முடியாது. அதே போல் இதற்குத் தீர்வும் ஓரளவுதான் கொண்டுவரமுடியும்.
ஃபெஞ்சல் புயல் குறித்து மூத்த பத்திரிக்கையாளர்கள், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள், எதிர் கட்சிக்காரர்களுக்கு அரசியல் செய்வதற்காக அரசாங்கத்தை குறை சொல்லித் திட்டி வருகின்றனர். ஆனால் அரசு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டது. பேரிடர் காலத்தில் மக்கள் அரசு சொல்வதைக் கேட்காமல் இருப்பது எல்லா ஆட்சிக் காலங்களிலும் நடந்து வருகிறது. செய்ய முடிந்த அனைத்தையும் அரசாங்கம் செய்திருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லையென பா.ஜ.க.வினர் கூறுகிறார்கள் என்றால், சமீபத்தில் குஜராத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியபோது என்ன செய்தார்கள்? அவர்களால் என்ன செய்ய முடிந்தது. அன்புமணி ராமதாஸ் தண்ணீர் தேங்கியதால் விமான சேவை ரத்தாகிறது என்கிறார். அவருக்கு அமெரிக்கா போன்ற நாடுகளில் மழை, பனி காரணங்களால் விமான சேவைகளை நிறுத்தி வைப்பது தெரியாதா? எதாவது பேசிய ஆகவேண்டும் என்று அவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் எல்லோரும் புயலால் பயங்கரமான பாதிப்புகள் ஏற்படும் என்று எதிர்பார்த்து துன்பத்தில் இன்பம் காணும் அரசியல் செய்யலாம் என்ற நினைப்பில் இருக்கிறார்கள். அ.தி.மு.க. ஆட்சியில் புயல் வரும்போது சரியாக கையாண்டுவிட்டார்களா? கடந்த முறை வெள்ள பாதிப்பின்போது நிவாரண நிதி கேட்டதற்கு ஒரு அணா கூட மத்திய அரசு தரவில்லை. உண்மையிலேயே கடமையிருக்கின்ற எதிர்க்கட்சியாக அ.தி.மு.க. இருந்தால் மத்தியில் ஆட்சி செய்பவர்களைக் கேள்வி கேட்க வேண்டும். தூத்துக்குடியில் வெள்ளம் வந்தபோதும் தி.மு.க. ஆட்சியைக் குறை சொன்னார்கள். அப்படி சொன்னவர்களை மக்கள் நாடாளுமன்றத் தேர்தலில் புறம் தள்ளினார்கள்.
பா.ஜ.க. மாநில தலைவர், மக்களவை தேர்தலில் வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களில் தி.மு.க. டெபாசிட் வாங்காது என்றார். ஆனால் மக்கள் அவரை தோற்கடித்தனர். அவர் எப்போதும் பப்ளிசிட்டி தேடுபவராக இருப்பதால் இப்போது துணை முதல்வரைப் பற்றி விமர்சித்துப் பேசியிருக்கிறார். உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆவது தி.மு.க. கட்சி சமாச்சாரம். அதற்கேற்ப அவரும் கட்சி வேலைகளையும் மக்கள் பணிகளையும் செய்துகொண்டே இருக்கிறார். மக்களும் அவரை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். வாரிசு, வாரிசு என்று விமர்சிப்பதற்கு அவர் எந்த வேலையும் செய்யாமலா? இருக்கிறார். முதலில் எம்.எல்.ஏ. அடுத்து அமைச்சர் இப்போது துணை முதல்வர் ஆகியிருக்கிறார். அதை தி.மு.க.வினரே ஏற்றுக்கொண்டார்கள். அதனால் இதில் பா.ஜ.க. மாநில தலைவர் பேசுவதற்கு என்ன இருக்கிறது. அவர்கள் கட்சியில் வாரிசைப் பற்றிப் பேசினால் பெரிய லிஸ்டு எடுத்து பேசிக்கொண்டே போகலாம் அந்த அளவிற்கு உள்ளது.
செந்தில் பாலாஜியை முடக்கிவிடலாம் என்று பா.ஜ.க. மாநில தலைவர் நினைத்தார். ஆனால் அதில் ஏமாற்றம் அடைந்தார். செந்தில் பாலாஜியின் தாக்கம் அவர் எங்கியிருந்தாலும் கொங்குப் பகுதியில் பிரமாதமாக இருக்கும். செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம், ஜாமீன் கொடுத்து அமைச்சராவதற்கு தடை இல்லை என்று சொல்லிவிட்டது. பெரியார் சிலையை உடைப்பதாக பேசியது மற்றும் கனிமொழி எம்.பி குறித்து அவதூறு பேசிய வழக்கில், ஹெச். ராஜாவுக்கு சிறை தண்டனை கொடுப்பது பற்றி நீதிமன்றம் பேசியது ஆச்சர்யமாக இருந்தது. ஹெச். ராஜா என்னுடைய நல்ல நண்பர்தான். ஆனால் அவருக்கு கண்டிப்பாக வாய்ப்பூட்டு போட வேண்டும். லிமிட்டே இல்லாமல் என்னவேண்டுமானாலும் பேசுவார். குறிப்பிட்ட சிலர் பெரியாரை உயர்வாக கொண்டாடும்போது ஏன் அப்படி பதிவிட வேண்டும்? ‘அடாது செய்தால் படாதுபடுவார்’ என்ற பழமொழிக்கு ஏற்ப அவர் செய்ததற்கு அனுபவித்துதான் ஆகவேண்டும் என்றார்.