ராமாயணக் கதையைக் கொண்டு தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் வெளிவந்துள்ள நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு மது மந்தனா தயாரிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் பெரிய பட்ஜெட்டில் ராமாயணம் கதையை எடுக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூர் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும் சாய் பல்லவி சீதை கதாபாத்திரத்திலும், ‘கே.ஜி.எஃப்’ யஷ், ராவணன் கதாபாத்திரத்திலும் நடிக்கவுள்ளதாகச் சொல்லப்பட்டது.
இப்படத்தில் சாய்பல்லவி, சீதை கதாபாத்திரத்திற்காக படப்பிடிப்பு முடியும்வரை அசைவ உணவுகள் எதையும் தொடுவதில்லை என்றும் ஹோட்டலில் சாப்பிடாமல் வெளியூர்களுக்குச் செல்லும்போது கையோடு சமையல்காரர்களை அழைத்துச் செல்கிறார் என்றும் அண்மையில் செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் அவ்வாறு செய்திகள் வெளியானால், சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்போவதாக சாய்பல்லவி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூகவலைதளப் பதிவில், “ஆதாரமற்ற வதந்திகள், இட்டுக்கட்டப்பட்ட பொய்கள், தவறான அறிக்கைகள் உள் நோக்கத்துடனோ இல்லாமலோ பரப்பப்படுவதைக் காணும் போதெல்லாம் நான் அமைதியாக இருப்பதைத் தேர்வு செய்கிறேன் என்பது கடவுளுக்குத் தெரியும். ஆனால் இது தொடர்ந்து என்னுடைய பட வெளியீடு மற்றும் அறிவிப்புகள் வெளியாகவுள்ள நேரங்களில் நடக்கிறது என்பதால், எதிர்வினையாற்ற வேண்டிய நேரம் இது எனத் தோன்றுகிறது. அடுத்தமுறை பிரபல சமூகவலைத்தளப் பக்கமோ, ஊடகமோ, தனிநபர் செய்தியோ, கிசு கிசு என்ற பெயரில் தவறான தகவலைப் பரப்புவதைக் கண்டால், என்னிடமிருந்து சட்டப்படியான நடவடிக்கைகளை நீங்கள் கேள்விப்பட வேண்டியிருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.