Skip to main content

அதி கனமழைக்கான வாய்ப்பு - 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

Published on 12/12/2024 | Edited on 12/12/2024
Chance of Heavy Rain Red Alert for 3 Districts

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இத்தகைய சூழலில் தான் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனையடுத்து தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு வட மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகத் தமிழகம் முழுவதும் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் இன்று (12.12.2024) அதி கனமழைக்கான வாய்ப்பு உள்ளது. இதனால் இந்த 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

அதே சமயம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை,  ராமநாதபுரம், கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் மிகக் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது. இதனால் ஆரஞ்சு அலர்ட் விடப்படுகிறது. கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்