கேரளா மாநிலத்தில் நடைபெற்ற வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழா இன்று (12.12.2024) காலை முதல் வைக்கம் நகரில் நடைபெற்று வருகிறது. முன்னதாக இந்த விழாவில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று (11.12.2024) சென்னையில் இருந்து விமானம் மூலம் கொச்சின் புறப்பட்டுச் சென்றார். அதன் பிறகு அங்கிருந்து வைக்கம் நகருக்குப் பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறையால் புதுப்பிக்கப்பட்ட தந்தை பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணியளவில் திறந்து வைத்தார்.
இந்த விழாவிற்கு கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையேற்றுள்ளார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி முன்னிலை வகிக்கிறார். இந்த விழாவில் தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, மு.பெ. சாமிநாதன் உட்பட கேரள அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர். அதோடு வி.சி.க. தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர். இதன் ஒரு பகுதியாகத் தந்தை பெரியார் நினைவகத்தில் உள்ள அவரது உருவப்படத்திற்கு இந்த விழாவில் பங்கேற்றுள்ள தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதனையொட்டி 2024ஆம் ஆண்டிற்கான ‘வைக்கம் விருது’ கர்நாடக மாநிலம், மைசூரு மாவட்டத்தைச் சேர்ந்த புகழ் பெற்ற எழுத்தாளர் தேவநூர மஹாதேவாவுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டிருந்தது. அதன்படி தேவநூர மஹாதேவாவுக்கு ஐந்து இலட்சம் ரூபாய்க்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் தங்க முலாம் பூசிய பதக்கம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால், இன்று நடைபெற உள்ள வைக்கம் நினைவகம் திறப்புவிழா நிகழ்ச்சியில் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.