உத்தரப் பிரதேச மாநிலம் மிஷ்ரைன் கிராமத்தைச் சேர்ந்த கீலாவதிக்கு(34) கடந்த ஜூலை மாதம் கருப்பையில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவரது கணவர், கீலாவதியை அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு அவருக்கு சிகிச்சையளித்த பெண் மருத்துவர் ஆஷா கங்வார் கீலாவதியின் கர்ப்பப்பையை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றினார். இதனைத் தொடர்ந்து, சில நாட்கள் மருத்துவமனையில் இருந்துவிட்டு பின்னர் டிர்ஜார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பி இருக்கிறார்.
ஆனாலும், கீலாவதிக்கு வயிறு வீங்கி, அடிக்கடி வலி ஏற்பட்டுள்ளது. அதற்கு வேறு ஒரு மருத்துவமனையில் சிகிச்சையும் எடுத்து வந்திருக்கிறார். இப்படியாக மூன்று மாதம் வலிக்கு சிகிச்சை எடுத்து வந்த கீலாவதி ஒரு கட்டத்தில் தனக்குக் கருப்பை அறுவை சிகிச்சை செய்த பெண் மருத்துவரிடமே சென்றிருக்கிறார். அவரிடம் நடந்ததை கூறியவுடன், பெண் மருத்துவர் ஆஷா கங்வார், கீலாவதியின் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்துள்ளார். அதில் அறுவை சிகிச்சை செய்யப் பயன்படுத்தப்படும் பஞ்சு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இதனை கீலாவதியிடம் கூறாமல், ஒன்றுமில்லை என்று கூறி அவர்களை அனுப்பி வைத்துள்ளார்.
இருப்பினும் கீலாவதிக்கு வலி குறைந்தபாடில்லை. மனைவிப்படும் வேதனையை உணர்ந்த கீலாவதியின் கணவர், அவரை வேறு ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போது அந்த மருத்துவமனையில் ஸ்கேன் செய்துபார்த்த போது, கீலாவதியின் வயிற்றில் பஞ்சு தவறுதலாக வைத்துத் தைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, இரண்டு அறுவை சிகிச்சை செய்யது பஞ்சை அகற்ற மருத்துவர்கள் முடிவெடுத்தனர். அதன்படி அவருக்கு இரண்டு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்ட நிலையில் இரண்டாவது அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சில மணி நேரத்தில் பரிதாபமாக கீலாவதி உயிரிழந்தார். இதனால் பெரும் அதிர்ச்சியடைந்த கீலாவதியின் கணவர் மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.