
திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர், அரசியல் தொடர்பான பல்வேறு தகவல்களை நமது நக்கீரன் நேர்காணல் வாயிலாகப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் ஃபெஞ்சல் புயலின்போது தமிழக அரசு மீது வந்த விமர்சனம் குறித்தும் த.வெ.க. தலைமை அலுவலகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் நிவாரணம் வழங்கியது குறித்தும் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
ஃபெஞ்சல் புயலால் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வந்த நிலையில், மூன்றே மணி நேரத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மக்களுக்கு களத்தில் துணை நின்றார். மற்ற அமைச்சர்களும் புயல் கரையைக் கடக்கும்போது களத்தில் நின்றனர். ஆனால் பா.ஜ.க. சார்பில் நிவாரணம் தருவதாகக் கூறி 120 பேருக்கு டோக்கன் கொடுத்திருக்கின்றனர். அந்த நிவாரணப் பொருட்களின் விலை ரூ.2000 மதிப்புடையதாக இருந்தது. அதை வெறும் 13 பேருக்கு மட்டும்தான் கொடுத்திருக்கிறார்கள் என்று செய்திகள் வெளியாகியிருந்தது.
அதே போல் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தபோது கஜா புயல் வந்தது, அப்போது டெல்டா மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். அந்த மக்களைப் பார்க்க எப்போது போவீர்கள் என்று செய்தியாளர்கள் பழனிசாமியிடம் கேட்டபோது அவர், சில நிகழ்ச்சியில் ஒப்புகொண்ட காரணத்தினால் வரமுடியாது என்று சொல்லி 4 நாட்களுக்குப் பிறகு மக்களைச் சந்திக்கப் போனார். அங்கு மக்கள் மின்சாரம் இல்லாமல் கஷ்டப்பட்டார்கள். ஆனால் இப்போது பாதிக்கப்பட்ட இடங்களில் மின்சாரம் இன்றி மக்கள் கஷ்டப்படுகிறார்களா? திருவண்ணாமலையில் பெய்த கனமழையால் சாத்தனூர் அணை நிரம்பியது. அணை நிரம்பும்போது சரியான முன்னெச்சரிக்கை விடப்பட்டு அணை திறந்துவிடப்பட்டது. அப்படித் திறந்துவிடாமல் இருந்திருந்தால் அணை உடைந்து பாதிப்பு ஏற்பட்டிருக்கும். இதனை எதிர்க்கட்சி தலைவர் மற்றும் பா.ஜ.க. மாநில தலைவர் விமர்சிக்காமல் இருந்தாலே அறம் சார்ந்த அரசியலாக இருக்கும் என்பதை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் சென்னையில் வெள்ளம் வந்தது, அப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவரின் தொண்டர்கள் ஸ்டிக்கர் ஒட்டி நிவாரணப்பொருட்களை கொடுத்தார்கள். அதன் பின்பு ஜெயலலிதா 11வது நாள் பாதிக்கப்பட்ட மக்களை ஆர்.கே. நகரில் நலம் விசாரித்தார். அவரது கார் டயரில் கூட தண்ணீர் படவில்லை அதைக்கூட அரசியலில் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் பாதிக்கப்பட்ட மக்களை பனையூர் பங்களாவிற்கு வரச் சொல்லி விஜய் நிவாரணம் கொடுத்துள்ளார். ஏன் அவர் வாக்கு கேட்கும்போது மக்களை நேரில் பார்க்க மாட்டாரா? பனையூர் பங்களாவிற்கு வரச் சொல்லித்தான் ஓட்டு கேட்பாரா? விஜயகாந்தைவிட விஜய் என்ன பெரிய தலைவரா? முன்பு விஜய் நீட் தேர்வால் மரணமடைந்த அனிதாவின் வீட்டிற்குப் போனார். ஆனால் அதன் பிறகு நீட் தேர்வை ஒழிக்க வேண்டுமென்று த.வெ.க. மாநாட்டுக்கு முன்பு வரை அவர் அனிதா பற்றிப் பேசினரா?
தூத்துக்குடி துப்பாக்கி சம்பவத்தின் போது எடப்பாடி பழனிசாமிக்கு கண்டன அறிக்கை விஜய் வெளியிட்டாரா? அன்றைக்கு அவரிடம் சமூகவலைத்தள பக்கம் இல்லையா? இதையெல்லாம் கூட விட்டுவிடலாம் ஆனால் பாதிக்கப்பட்ட மக்களை விஜய் நேரில் சந்தித்தால் கூட்டம் கூடும் என்று சொல்லிவிட்டு பனையூரில் அழைத்து நிவாரணம் கொடுத்து பிச்சை போட்டுள்ளார். அவருடைய விளம்பர வெறிக்கு மக்களை அடிமையாக்கப் பார்க்கிறாரா? எத்தனை பேருக்கு அவர் நிவாரணம் கொடுத்திருப்பார். அவர் மாநாடு நடத்திய விக்கிரவாண்டி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் அங்கு சென்று அவர்களைப் பார்ப்பதற்கு வக்கு இல்லை. சேற்றில் கால் படக்கூடாது என்பதற்காக மக்களை அழைத்து பிச்சைக்காரர்கள் ஆக்கி வாசலில் வந்து நிவாரணம் வாங்கும் இழி நிலைக்கு மக்களைத் தள்ளியுள்ளார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.