நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 25ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடர் டிசம்பர் 20ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. எதிர்க்கட்சிகள் சார்பில் அதானி மீதான குற்றச்சாட்டு, மணிப்பூர் விவகாரம், ஃபெஞ்சல் புயல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு அனுமதி மறுக்கப்படுவதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், 18 வயதுகுட்பட்ட திருமணமான பெண்ணை, கணவர் பாலியல் வன்கொடுமை செய்தால் குற்றமாக கருதப்படுமா? என்று மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த உள்துறை இணையமைச்சர் பண்டி சஞ்சய் கூறியதாவது, “பாரதிய நியாய சன்ஹிதா, 2023யின் பிரிவுகள் 74, 75, 76, 85 மற்றும் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் 2005, ஆகியவை திருமணமான பெண்களுக்கு போதுமான சட்டப் பாதுகாப்பை வழங்குகிறது.
இந்த விதிகள், ஒரு பெண்ணின் உரிமைகள் மற்றும் கண்ணியம் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்கிறது. எனவே, அந்த பெண் 18 வயதுக்கு மேல் இருக்கும் வரை, ஒரு ஆணுக்கும் அவரது மனைவிக்கும் இடையிலான பாலியல் செயல்களை குற்றமாகக் கருத வேண்டிய திட்டம் அரசுக்கு இல்லை” என்று கூறினார்.