புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் பேரிடர் மேலாண்மை கூட்டம் சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்றது. இதில் அனைத்து துறையைச் சேர்ந்த அதிகாரிகளும் கலந்துக்கொண்டு புயலின் பாதிப்புகளை எடுத்து கூறினர்.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, "நிவர் புயலின்போது புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் மரங்கள் சாய்ந்தன, பயிர்கள் சேதமடைந்தன. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. எனினும் உயிரிழப்பு ஏதுமில்லை. தாழ்வான பகுதிகளில் தங்கியிருந்த 3,397 பேர் வெளியேற்றப்பட்டு 2,652 பேர் புகலிடங்களில் தங்க வைக்கப்பட்டனர். நிவர் புயலில் உயிர்ச்சேதம் ஏற்படாத வகையில் செயல்பட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அனைத்து துறை அதிகாரிகள், ஊழியர்களுக்கும், பேரிடர் மீட்புக் குழுவினருக்கும் எனது சார்பிலும், புதுச்சேரி மக்கள் சார்பிலும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
முதல் கட்ட புயல் சேத கணக்கெடுப்பில் புதுச்சேரியில் 820 ஹெக்டேர் நெல் விவசாய நிலமும், 200 ஹெக்டேர் காய்கறி தோட்டங்களும், 170 ஹெக்டேர் கரும்பு தோட்டங்களும், 7 ஹெக்டேர் வெற்றிலை தோட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. 55 ஹெக்டேர் வாழை தோட்டங்களிலிருந்து வாழை மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இதனால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது உத்தேசமாக ரூபாய் 400 கோடி அளவுக்கு சேதம் இருக்கலாம் என கணக்கெடுத்துள்ளோம். இதன் அடிப்படையில், புயலால் பாதிக்கப்பட்டுள்ள புதுச்சேரி மாநிலத்துக்கு மத்திய அரசு இடைக்கால நிவாரணமாக ரூபாய் 50 கோடி வழங்க வேண்டும் என கடிதம் எழுத உள்ளேன். முழு கணக்கெடுப்பு முடிந்ததும், மத்திய அரசிடம் மொத்த இழப்பீடும் கேட்கப்படும். முழு கணக்கெடுப்பு முடிந்ததும், மக்களுக்கு நிவாரணம் குறித்து முடிவெடுக்கப்படும்" என கூறினார்.