
‘அரசியல் சடுகுடு’ என்ற தலைப்பில் நக்கீரன் நடத்தி வரும் நேர்காணலில் அரசியல் தொடர்பான பல்வேறு கருத்துகளை அரசியல் விமர்சகர்கள் பலர் பேசி வருகின்றனர். அந்த வகையில் தி.மு.க கொள்கை பரப்பு மாநில துணைச் செயலாளர் ச.அ.பெருநற்கிள்ளி, விஸ்வகர்மா திட்டம் குறித்து தனது கருத்துகளை நம்மிடையே பகிர்ந்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தங்களது கொள்கையை நிலைநிறுத்தப் போராடி வருகிறார்கள். அதில் 60% வெற்றி பெற்றுவிட்டார்கள் என்று சொல்லக்கூடிய அளவிற்கு மதவாதக் கட்சியான பா.ஜ.க. தனது ஆட்சியில் நீடித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக கட்டமைப்பைத் தகர்க்க முயற்சிக்கின்றனர். அதனுடைய உச்சம்தான் விஸ்வகர்மா என்ற கல்விக் கொள்கைத் திட்டம்.
சனாதன தத்துவத்தை வகித்து வர்ணாசிரமம் என்கிற பெயரில் உலகம் கடவுளுக்கு கட்டுப்பட்டது என்றும் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்றும் பிரித்து வைத்துள்ளனர். அதில் பிராமணர்தான் கல்வி கற்க வேண்டும் என்று மற்ற சமூகத்தாரை ஒடுக்கினார்கள். அதையே இப்போது விஸ்வகர்மா என்ற பெயரில் கொண்டுவர நினைக்கின்றனர். பிரதமர் மோடிக்கு பதவியைத் தவிர ஒன்றும் தெரியாது. ஆர்.எஸ்.எஸ். என்ன சொன்னாலும் செய்யும் ரிமோட் மனிதராக மோடி இருக்கிறார். அதனால்தான் பேராபத்துடைய இத்திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள். நச்சான இத்திட்டத்தை மக்களிடையே விதைக்கப் பார்க்கிறார்கள். மலம் கழிக்கிற சங்கராச்சாரி வாழையில் கழிப்பான் அதைச் சூத்திரன் என்று சொல்லக்கூடியவர்கள் தலையில் சுமக்க வேண்டும். இதுபோன்ற நிலையை மாற்றியவர்கள் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் மற்றும் தந்தை பெரியார். அவர்கள் மாற்றியதை விஸ்வகர்மா மூலம் மீண்டும் கொண்டு வரப்பார்க்கிறார்கள். குலத் தொழிலுக்கு கடன் தருகிறோம், பயிற்சி தருகிறோம் என்று விஸ்வகர்மா திட்டம் மூலம் ஒதுக்கி வைக்கப் பார்க்கின்றனர்.
சலவை செய்பவர், தச்சர், குயவர் என ஒடுக்கப்பட்டவர்களை மாவட்ட ஆட்சியராக, டாக்டராக, ஆசிரியராக திராவிட கட்சிகள் மாற்றியுள்ளது. ஆனால் விஸ்வகர்மா மூலம் சாதிய கட்டமைப்பை நிலை நிறுத்தி அதிகாரத்தை பார்ப்பனர்கள் வைத்துக்கொண்டு நெய்யும் சோறும் திண்பதுதான் விஸ்வகர்மா திட்டம் என்றால் அதைத் திராவிட மாடல் அரசு எப்படி எதிர்க்காமல் இருக்கும். காலம் மாறிவிட்டது என்பதற்காகக் கோயிலில் அர்ச்சகர் பணியைக் கொடுப்பார்களா? இத்திட்டம் வருவதால் நாகரீகம் மற்றும் மனித உரிமை தடைபடும். அப்படிப்பட்ட மானங்கெட்ட திட்டத்தைக் கொண்டு வருகிறார்கள். இந்த குலக்கல்வி திட்டத்தை தமிழ்நாட்டில் திணித்தால் விளைவு வேறு மாதிரி இருக்கும்.