புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துக்கான நிதியை மத்திய அரசு குறைத்ததற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளரும், விழுப்புரம் மக்களவை உறுப்பினருமான துரை.ரவிக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், "புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் போன ஆண்டை விட குறைவாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2019- 2020 பட்ஜெட்டில் 1100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால் அதில் 1053.48 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது .இந்த ஆண்டு போன ஆண்டைவிட 100 கோடி ரூபாய் குறைத்து 1000 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் சண்டிகரில் உள்ள இதேபோன்ற மருத்துவமனைக்கு 1426.53 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு 1500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட அந்த மருத்துவமனைக்கு 1760 கோடி ரூபாய் செலவிட்டுள்ளனர். ஒதுக்கப்பட்டதைவிட 260 கோடி ரூபாய் கூடுதலாக செலவு செய்யப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து ஜிப்மர் மருத்துவமனையை மத்திய அரசு புறக்கணித்து வருவது வேதனை அளிக்கிறது. ஜிப்மர் மருத்துவமனை புதுச்சேரி மக்களுக்கு மட்டுமின்றி அருகாமையில் உள்ள தமிழ்நாட்டின் விழுப்புரம், காஞ்சிபுரம், கடலூர், அரியலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட மக்களுக்கும் பயனளித்து வருவதாகும். இந்த மருத்துவமனைக்கு நிதி தொடர்ந்து குறைக்கப்பட்டு வருவது மத்திய அரசின் ஓரவஞ்சனைப் போக்கையே காட்டுகிறது. இதற்காக புதுச்சேரி அரசு குரல் எழுப்ப வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.