இந்தியாவில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோல் கரோனாவிற்குப் பலியானோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கரோனாவிற்குப் பலியாகியுள்ளனர்.
இந்தநிலையில், கரோனா மரணங்கள் தொடர்பான கேள்விக்கு, மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அமைச்சர் தெரிவித்துள்ள பதில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மத்தியப்பிரதேச அமைச்சர் பிரேம் சிங் படேலிடம், மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறித்து கேள்வியெழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த பிரேம் சிங் படேல், "இந்த உயிரிழப்புகளை யாராலும் தடுக்க முடியாது. கரோனாவிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான ஒத்துழைப்பு பற்றி பேசுகிறீர்கள். தினமும் பலர் உயிரிழப்பதாக நீங்கள் கூறுகிறீர்கள். மக்களுக்கு வயதாகிறது. அவர்கள் இறந்துதான் ஆக வேண்டும்" என தெரிவித்தார்.
அமைச்சரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பல்வேறு தரப்பிலிருந்தும் அமைச்சருக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.