சபரிமலையில் கடந்த 2020-2021ம் ஆண்டில் நடந்த மண்டல மகர பூஜையின் போது கரோனா தொற்று உச்சத்தில் இருந்ததால் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் மூலம் கோவிலுக்கு வர வேண்டிய வருமானமும் வராமல் போனது. இந்த நிலையில் கரோனா தொற்று ஓரளவு குறைந்திருந்த நிலையில் 2021-2022ம் ஆண்டுகான மண்டல மகர பூஜையில் ஆரம்பத்தில் தினமும் 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டும்தான் தரிசனம் எனத் திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்ததோடு ஆன்லைன் மூலம் முன்பதிவுக்கும் ஏற்பாடு செய்தது.
இதில் கரோனாவை மீறி ஆயிரக்கணக்கான பக்தா்கள் ஆர்வம் காட்டியதையடுத்து பக்தர்களின் எண்ணிக்கையைப் படிப்படியாக அதிகரித்ததோடு கடைசியில் பக்தர்களுக்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல், வழக்கம் போல தினமும் சபரிமலைக்கு வரக்கூடிய பக்தா்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்துவிட்டு வரலாம் என அறிவித்தனர். இதைத் தொடர்ந்து நடப்பு சீசனில் 61 நாட்கள் நடை திறக்கப்பட்டிருந்தது. இதில் அய்யப்பனைத் தரிசிக்க ஆன்லைன் முன் பதிவு மூலம் 23 லட்சத்து 98 ஆயிரத்து 512 பேர் பதிவு செய்து இருந்தனர்.
இதில் 17 லட்சத்து 17 ஆயிரத்து 448 பேர் மட்டும் அய்யப்பனை தரிசனம் செய்ய வந்திருந்தனர். அதன் பிறகு மகர விளக்கு நேரத்தில் உடனடி முன்பதிவு மூலம் 2 லட்சத்து 2 ஆயிரத்து 437 பேர் பதிவு செய்து தரிசனம் செய்தனர். இதனால் மொத்தம் 19 லட்சத்து 39 ஆயிரத்து 575 பேர் இந்த சீசனில் அய்யப்பனைத் தரிசித்துள்ளனர். இதேபோல் கோவிலுக்கு இந்த சீசனில் 151 கோடி ருபாய் வருமானமும் கிடைத்துள்ளது. இதில் உண்டியல் காணிக்கையாக 61.5 லட்சம் கோடியும் மற்றும் அரவணை விற்பனை மூலம் 54.5 கோடியும், அப்பம் விற்பனை மூலம் 7 கோடி ரூபாயும் வருமானமாகக் கிடைத்துள்ளன.
இது கடந்த சீசனை விட 130 கோடி ரூபாய் அதிகமாகும். இந்த நிலையில் கடந்த 14-ம் தேதி நடந்து முடிந்த மகரவிளக்குக்குப் பிறகு, தொடர்ந்து 6 நாட்கள் நடந்த சிறப்பு பூஜையை அடுத்து 20-ம் தேதி பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதி தரிசனத்துக்குப் பிறகு சபரிமலை கோவில் நடை அடைக்கப்பட்டது. இனி மாதந்தோறும் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு அந்த நாட்களில் தரிசனத்துக்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.