Skip to main content

மாவோயிஸ்ட்டுகளுடன் சண்டை- 22 வீரர்கள் வீரமரணம்!

Published on 04/04/2021 | Edited on 04/04/2021

 

chhattisgarh crpf soldiers incident union home minister talk to at the state cm

 

சத்தீஸ்கர் மாநிலம், பிஜப்பூர்- சுக்மா மாவட்ட எல்லையில் உள்ள வனப்பகுதியில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் (Central Reserve Police Force), ஸ்பெஷல் டாஸ்க் ஃபோர்ஸ் (Special Task Force), மாவட்ட சிறப்பு பாதுகாப்பு படையினர் , கமாண்டோ பட்டாலியன் ரெசலூட் ஆக்சன் (Commando Battalion for Resolute Action) ஆகிய பிரிவைச் சேர்ந்த பாதுகாப்பு படையினர் இணைந்து மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் நேற்று (03/04/2021) அதிரடியாக ஈடுபட்டிருந்தனர். அப்போது மாவோயிஸ்ட்டுகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 22 வீரர்கள் வீர மரணமடைந்தனர். காயமடைந்த வீரர்கள் 32 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு வீரர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். ஒரு வீரர் காணவில்லை அவரை தேடும் பணித் தொடர்வதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றனர்.

 

இந்த சம்பவம் குறித்து சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல்வர் பூபேஷ் பாகேலை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சத்தீஸ்கர் மாநில முதல்வர், "மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். சி.ஆர்.பி.எஃப். டி.ஜி.யை மாநிலத்திற்கு அனுப்பியுள்ளார்" என்றார். 

 

மாவோயிஸ்ட்டுகள் உடனான துப்பாக்கிச் சண்டையில் வீர மரணமடைந்த பாதுகாப்பு படையைச் சேர்ந்த வீரர்களின் குடும்பத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "வீர மரணமடைந்த பாதுகாப்பு படையைச் சேர்ந்த வீரர்களுக்கு நான் தலைவணங்குகிறேன். அவர்களின் வீரத்தை தேசம் ஒருபோதும் மறக்காது. வீர மரணமடைந்த வீரர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த நமது பாதுகாப்பு படை வீரர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். 

 

அதேபோல், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோரும் வீர மரணமடைந்த வீரர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். 


 

சார்ந்த செய்திகள்