வெளிநாடுவாழ் இந்தியர்களைக் கொண்ட மாநிலங்களில் முதலிடத்திலிருப்பது கேரளா. அரபு நாடுகள், இத்தாலி, ஸ்பெயின், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் பணியிலிருப்பவர்கள் மலையாளிகள். இதில் கரோனா தொற்று 173 உலக நாடுகளைப் பாதிக்கச் செய்து மக்களை அச்சத்திலும், நடுக்கத்திலும் வைத்திருக்கிறது.
வெளிநாடுவாழ் மலையாளிகள் தாயகம் திரும்பி வருகிற சமயம் சோதனையிட்டதில் பலருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இப்படி கேரளாவில் கரோனா பரவியதில் 27 பேர் கரோனா தொற்று சிகிச்சையிலும் சுமார் எட்டாயிரம் பேர் கண்காணிப்பிலும் உள்ளனர்.
இந்நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முன்னேறிக் கொண்டிருக்கிறது கேரளா. முதல்வர் பினராய் விஜயனும், சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜாவும் இணைந்து கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். பிளான் A, பிளான் B, பிளான் C என மூன்று கட்டத் திட்டத்தின் அடிப்படையில் கரோனா தொற்று உள்ளவர்களை அரசு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மட்டும் தனிமைப்படுத்தும் வார்டுகளை அமைத்துள்ளனர்.
பிளான் பி படி, தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் அதன் மருத்துவமனைகளிலும், பிளான் சி படி, த்ரீ ஸ்டார், ஃபைவ் ஸ்டார் உள்ளிட்ட நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஹோட்டல்கள் என மூன்று பிரிவுகளிலும் கரோனா தொற்று தனிமைப்படுத்தும் (ஐ சோலேஷன்) வார்டுகள் அனைத்து மருத்துவ உபகரணங்களைக் கொண்டு அமைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கரோனா தொற்று அதிகமானவர்களுக்கு ஏற்பட்டால் அவர்களை உடனடி சிகிச்சைக்கு உட்படுத்த இந்த முன்னேற்பாடுகளாம்.
அடுத்து, 'BREAK THE CHAIN எனும் தொடர்பைத் துண்டியுங்கள் என்ற பேனரோடு கேரளா முழுவதிலும் பொது மக்கள் கூடும் பேருந்து நிலையம், ரயில் நிலையம், சந்தைக் கடைகள், மெயின் சாலைகள் என முக்கியமான பொது இடங்களில் சோப்புடன் கூடிய வாஷ்பேசின், அமைத்து மக்கள் கைகழுவும் வகையில், தடையின்றித் தண்ணீர் வசதியையும் அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள்.
இது போன்ற வசதிகளை அரசை எதிர்பாராமல், சி.பி.எம்.மின் உறுப்புகளான டி.ஒய்.எப், மற்றும் எஸ்.எப்.ஐ.பிரிவும் இணைந்தே தங்கள் சொந்த செலவில் கேரளா முழுவதிலும் சுமார் ஒரு லட்சம் பிரேக் தி செயின், வாஷ்பேசினை அமைத்திருக்கின்றனர்.
கொள்ளை நோய் கரோனாவை முறியடிப்பில் தேசத்திற்கு முன்னுதாரணமாகச் செயல்படுகிறது கேரளா.