ஒரே நேரத்தில் 40 குரங்குகள் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் நிகழ்ந்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் 20 குரங்குகள் உயிருக்கு போராடி வருகின்றன.
கர்நாடக மாநிலம் அசன் மாவட்டத்தில் சவுதனஹள்ளி கிராமத்தில் சாலையோரத்தில் ரத்த கரைகளுடன் கூடிய சாக்குப்பைகளை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். அந்த சாக்குப்பைகளுக்குள் 40க்கும் மேற்பட்ட குரங்குகள் ரத்த காயங்களுடன் இருந்தது. சவுதனஹள்ளி கிராமம் அதிகம் குரங்குகள் உள்ள பகுதி என்ற நிலையில், அங்கு அடிக்கடி குரங்குகள் வேட்டையாடப்படுவது வழக்கம். இப்படி மனிதாபிமானமே இல்லாமல் குரங்குகள் அடித்துக் கொல்லப்பட்டது அங்கிருந்த மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் இறந்த குரங்குகளை மீட்டு அடக்கம் செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் சாக்குப்பைக்குள் இருந்து 20 குரங்குகள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டது. இதுகுறித்த விசாரணையில் மர்ம நபர்கள் உணவில் விஷம் வைத்து குரங்குகளை பிடித்து சாக்குப் பைகளில் ஒன்றாக அடைத்து தரையில் அடித்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. இப்படி 40 குரங்குகள் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் விலங்குகள் நல ஆர்வலர்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.