கல்வி கற்பதற்கு வயது ஒரு தடையில்லை என்று பரவலாக சொல்லப்படுவதுண்டு. அதை உண்மையாக்கியிருக்கிறது மற்றும் ஒரு சம்பவம்.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்தவர் ராஜ்னி பாலா. 44 வயதாகும் இவர் 1989ஆம் ஆண்டு 9ஆம் வகுப்பு முடித்துள்ளார். குடும்பச் சூழல் காரணமாக அதற்கு மேல் படிப்பைத் தொடரமுடியாத நிலையில், அவருக்குத் திருமணம் நடைபெற்றுள்ளது. மூன்று குழந்தைகள் பிறந்துவிட்ட நிலையில், மீண்டும் படிப்பைத் தொடர நினைத்த ராஜ்னிக்கு அவரது கணவர், குழந்தைகள் மற்றும் மாமியார் ஆகியோர் உறுதுணையாக இருந்துள்ளனர்.
இந்நிலையில், பத்தாம் வகுப்பு படிக்கும் தனது மகனுடன் சேர்ந்து படிப்பைத் தொடர்ந்துள்ளார் ராஜ்னி. பள்ளிக்கும், சிறப்பு வகுப்புகளுக்கும் மகனோடு சேர்ந்தே சென்ற ராஜ்னி, ‘இந்தக் காலத்தில் பத்தாம் வகுப்பாவது படித்திருக்க வேண்டும். கல்வி அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது’ என தெரிவித்துள்ளார்.
ராஜ்னியின் கணவர் ராஜ்குமார் சாத்தி. இவர் பள்ளிக்காலம் முடிந்து 17 ஆண்டுகள் கழித்துதான் கல்லூரிப்படிப்பை முடித்துள்ளார். இதனால், தனது மனைவியின் நல்ல முடிவுக்கு ஆனந்தமாக தலையசைத்துள்ளார். கண்டிப்பாக இந்தத் தேர்வில் தேர்ச்சியடைந்துவிடுவேன் என ராஜ்னியும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.