ஐ.நா. அமைப்பின் பாதுகாப்பு சபையில் தற்காலிக உறுப்பினராக இந்தியாவை தேர்ந்தெடுக்க வாக்களித்த அனைத்து உலகநாடுகளுக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
ஐ.நா.-வின் பலமிக்க அமைப்புகளில் ஒன்றான பாதுகாப்பு சபையில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகிய ஐந்து நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளது. இவைத் தவிர சுழற்சி முறையில் 10 தற்காலிக உறுப்பு நாடுகளும் உள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வாக்களிப்பு நடைபெற்று, இந்தத் தற்காலிக உறுப்பு நாடு தேர்நதெடுக்கப்படும். அந்த வகையில் தற்போது காலியாக உள்ள 5 நாடுகளுக்கான உறுப்பினர் பதவியை நிரப்புவதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில், ஆசிய -பசிபிக் பிராந்தியத்தில் இருந்து இந்தியா போட்டியிட்டது. இந்தத் தேர்தலில் இந்தியாவுக்கு ஆதரவாக 184 நாடுகள் வாக்களித்தன. இதனைத் தொடர்ந்து மிகப்பெரிய ஆதரவோடு இந்தியா, ஐ.நா.வின் பாதுகாப்பு சபையில் உறுப்பினர் ஆகியுள்ளது. இந்த வெற்றி மூலம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்திய இச்சபையின் உறுப்பினராகச் செயல்படும். ஐ.நா.வின் பாதுகாப்பு சபையில் இந்தியா தற்காலிக உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவது இது எட்டாவது முறையாகும்.
இந்நிலையில் இந்த வாக்களிப்பில் இந்தியாவுக்கு ஆதரவாக வாக்களித்த உலக நாடுகளுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில், "ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியாவை உறுப்பினராகத் தேர்வு செய்ய பெரும் ஆதரவு அளித்த உலகச் சமூகத்துக்கு இந்தியாவின் சார்பில் ஆழ்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறேன். உலகில் அமைதி, பாதுகாப்பு, நிலைத்தன்மை, நீதி ஆகியவற்றை ஊக்குவிக்க உறுப்பு நாடுகளுடன் சேர்ந்து இந்தியா பணியாற்றும்” எனத் தெரிவித்துள்ளார்.