ஜேஇஇ தேர்வு விவகாரத்தில் சுப்ரமணியன் ஸ்வாமி கூறிய கணக்கு தவறானது என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் காலவரையரையின்றி மூடப்பட்டுள்ள நிலையில், கடந்த மே மாதமே நடைபெற இருந்த நீட் தேர்வு கரோனா காரணமாக ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் செப்டம்பர் 13 அன்று தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதேபோல ஜே.இ.இ. மெயின் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6 ஆம் தேதி வரையிலும், ஜே.இ.இ. அட்வான்ஸ் தேர்வு செப்டம்பர் 27 ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, ஐஐடி, என்.ஐ.டி. உள்ளிட்ட மத்திய கல்வி நிறுவங்களின் சேர்வதற்கான ஜேஇஇ மெயின் தேர்வு கடந்த ஒன்றாம் தேதி தொடங்கியது. இந்நிலையில், நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளுக்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் சுப்ரமணியன் ஸ்வாமி, "கடந்த வாரம் நடைபெற்ற ஜேஇஇ தேர்வில் எத்தனை மாணவர்கள் பங்கேற்றனனர் என்பதற்கான துல்லியமான எண்ணிக்கையை நான் பெற்றுள்ளேன். தேர்வுக்கு 18 லட்சம் பேர் விண்ணப்பித்ததில் 8 லட்சம் பேர் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். இது கல்வியை புகழ்ந்து பேசும் நாட்டிற்கு இழிவு தான்" எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், "ஜே.இ.இ. மெயின் தேர்வு தொடர்பான கருத்தில் உண்மையை எடுத்து சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். ஜே.இ.இ. மெயின் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் 8.58 லட்சம் பேர் தான். நீங்கள் ட்வீட் செய்தது போல 18 லட்சம் பேர் அல்ல. மொத்தமாக 6.35 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதியுள்ளனர். மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஒத்துழைப்போடு இது சாத்தியமாகி உள்ளது. இந்த தேர்வுக்கு கடுமையாக பயிற்சி செய்து தயாராகவும் மாணவர்களின் நலன் கருதி அவர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்ட நம் அரசு இந்த தேர்வை நடத்தியுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.