காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கான், இந்திய பிரதமர் மோடியின் நடவடிக்கையை விமர்சித்திருக்கிறார்.
இம்ரான்கான் பாகிஸ்தானில் ஆற்றிய உரை இதோ –
காஷ்மீர் விவகாரம் போரை நோக்கிச் சென்றால் என்னவாகும்? இரண்டு நாடுகளிடமும் அணு ஆயுதங்கள் உள்ளனவே? இதை நினைத்துப் பார்க்க வேண்டும். சர்வதேச அளவில் இந்த விவகாரம் பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். உலகிலுள்ள பெரிய நாடுகளுக்குப் பெரிய அளவில் பொறுப்பு இருக்கிறது. உலக நாடுகள் பாகிஸ்தானை ஆதரித்தாலும், ஆதரிக்கவில்லையென்றாலும், அனைத்து எல்லைகளுக்கும் பாகிஸ்தானால் செல்ல முடியும். நாங்கள் காத்திருக்க நேரிட்டது. ஆம். இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்திட பலதடவை நாங்கள் முயற்சித்தோம். முடியாமல் போனதற்குக் காரணம் அந்நேரம் இந்தியாவில் தேர்தல் நடந்துகொண்டிருந்தது. புல்வாமா தாக்குதல் வேறு நடந்துவிட்டது. அதைவைத்து, பாகிஸ்தானை நோக்கி கைகாட்டியது இந்தியா. கருப்புப் பட்டியலில் பாகிஸ்தானைச் சேர்த்துவிட பல வழிகளிலும் முயற்சித்தது இந்தியா. இச்செயலின் மூலம், பாகிஸ்தான் குறித்த இந்தியாவின் கொள்கை என்னவென்பதை எங்களால் அறிய முடிந்தது.
இந்தியாவின் ஒருதலைபட்சமான முடிவுதான் காஷ்மீரை இந்திய அரசு தங்கள் நாட்டுடன் சேர்த்துக்கொண்டது. இது, ஐ.நா. தீர்மானத்திற்கு எதிரானது மட்டுமல்ல.. இந்திய அரசமைப்பிற்கும் எதிரானது. குறிப்பாக, ஜவஹர்லால் நேரு மற்றும் காந்தியின் உறுதிமொழிக்கு எதிரான செயலாகும். கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி காஷ்மீருக்கு வழங்கியிருந்த சிறப்புரிமையை ரத்துச் செய்ததன் மூலம், இந்தியா என்பது இந்துக்களுக்கு மட்டுமான நாடு என்பதை எங்களால் தெரிந்துகொள்ள முடிகிறது.
1920-இல் தொடங்கப்பட்டது ஆர்.எஸ்.எஸ். அதன் அரசியலமைப்பாக பா.ஜ.க. உருவானது. பாகிஸ்தானுடன் நரேந்திரமோடி அரசு ஏன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தவில்லை? இதைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், வரலாற்றை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். ஆர்.எஸ்.எஸ். கொள்கைதான் பா.ஜ.க.வுக்கும். அந்தக் கொள்கையின்படி பார்த்தால், இந்தியா இந்துக்களுக்கு மட்டுமான நாடு. வரும் செப்டம்பர் 27-ஆம் தேதி, ஐ.நா.வில் காஷ்மீர் விவகாரம் குறித்து உலகநாடுகளிடையே உரை நிகழ்த்துவேன். இந்த விவகாரத்தை உலக நாடுகளின் கவனத்துக்குக் கொண்டுசெல்லும் முயற்சியில் பாகிஸ்தானுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது.” என்றெல்லாம் பேசியிருக்கிறார் அந்நாட்டின் பிரதமர்.
மொத்தத்தில், காஷ்மீர் விவகாரம் பாகிஸ்தானுக்கு கிலி ஏற்படுத்தியிருப்பதை தெளிவுபடுத்துவதாக உள்ளது இம்ரான்கானின் உரை.