கேரளா மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம் வர்கலா நகரில் சிவகிரி யாத்திரை தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில், அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர், “சனாதன தர்மத்தின் மிக முக்கியமான பகுதி ‘சதுர் வர்ணம்’ அடிப்படையிலான ‘வர்ணாஷ்ரம தர்மம்’ ஆகும். அது என்ன நிலைநாட்டியது? ஒருவரின் சாதி அடிப்படையிலான வேலைகள். ஆனால் ஸ்ரீ நாராயண குரு என்ன செய்தார்? ஒருவரின் மதத்தின் அடிப்படையில் வேலைகளைச் செய்ய வேண்டும் என்ற கருத்தை மீறுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
ஸ்ரீ நாராயண குரு சனாதன தர்மத்தின் பேச்சாளர் அல்லது பயிற்சியாளர் அல்ல. மாறாக, அவர் அந்த தர்மத்தை உடைத்து, புதிய சகாப்தத்திற்கு ‘தர்மத்தின்’ புதிய யுகத்தை அறிவித்த ஒரு துறவி. சமூக சீர்திருத்தவாதியை சனாதன தர்மத்தின் ஆதரவாளராக சித்தரிக்கும் முயற்சி கண்டிக்கத்தக்கது.
சில காலத்திற்கு முன்பு, ஒரு நிகழ்ச்சியில் ஸ்ரீ நாராயண குரு சனாதன தர்மத்தை ஆதரிப்பதாக ஒரு பாஜக தலைவர் கூறினார். அங்கேயே அவரைத் திருத்தினேன். குரு ஒருபோதும் சனாதன தர்மத்தின் பேச்சாளராக இருந்ததில்லை. அதைத் தெரிந்துகொள்ள நீங்கள் வரலாற்றைச் சரிபார்க்க வேண்டும். இது எனது நிலைப்பாடு” என்று தெரிவித்தார். சனாதனம் குறித்து கேரளா முதல்வர் விமர்சித்து பேசியதற்கு பா.ஜ.க கண்டனம் தெரிவித்துள்ளது.