மத்திய அரசு சார்பில், ஆண்டுதோறும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ‘மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா’ விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அந்த வகையில், இந்தாண்டுக்கான விளையாட்டுத் துறையின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘கேல் ரத்னா’ விருதுக்கான பரிந்துரைப் பட்டியல் சமீபத்தில் வெளியானது. ஆனால், அந்த பட்டியலில் பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இரண்டு பதக்கங்களை வென்ற மனு பாக்கரின் பெயர் இடம்பெறவில்லை. இது, இந்திய அளவில் பேசு பொருளாக மாறியிருந்தது.
இந்நிலையில் மத்திய அரசு சார்பில் 2024ஆம் ஆண்டுக்கான மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 4 வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ், மனுபாக்கருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹாக்கி வீரர் ஹர்மன் ப்ரீத் சிங், பாரா தடகள வீரர் பிரவின் குமாருக்கும் கேல் ரத்னா விருது. கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ள ஹர்மன் ப்ரீத் சிங் இந்திய ஹாக்கி அணியின் கேப்டனாக உள்ளார். ஜனவரி 17ஆம் தேதி (17.01.2025) டெல்லியில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இந்த விருதை வழங்க உள்ளார்.
முன்னதாக, ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கம் வென்ற மனு பாக்கரின் பெயர் விருது பட்டியலில் இல்லாதது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தைத் தந்தது. அதே சமயம்‘கேல் ரத்னா’ விருதுக்கு மனு பாக்கர் விண்ணப்பிக்கவில்லை என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் தெரிவித்திருந்த நிலையில், மனு பாக்கரின் தந்தை, ‘தாங்கள் முறையாக விண்ணப்பித்தும் பதிலளிக்கவில்லை’ என்று குற்றம் சாட்டியிருந்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்திருந்த மனு பாக்கர், “விருதுகளும், அங்கீகாரமும் எனக்கு ஊக்கமளித்தாலும், அவை எனது நோக்கம் அல்ல. ஒரு வீராங்கனையாக நாட்டுக்காக விளையாடுவது மட்டுமே எனது இலக்கு. விருதுக்கு விண்ணப்பிக்கும் போது பிழை இருந்திருக்கக் கூடும். விருதுகள் கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் தொடர்ந்து நாட்டுக்காகப் பதக்கங்களை வெல்வேன்” எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.