மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே கடந்த 2023ஆண்டு மே மாதம் ஏற்பட்ட மோதல், ஆளும் பா.ஜ.க அரசின் அலட்சியத்தால் கலவரமாக மாறியது. மெய்தி மக்களை, பழங்குடிப் பட்டியலில் சேர்க்கும் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்ப ஆளும் பாஜக அரசுக்கு மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதனை எதிர்த்து குக்கி பழங்குடியின மக்கள் நடத்திய அமைதிப் பேரணியில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில், பல நூறு பேர் கொல்லப்பட்டு, பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, வீடுகள் சூறையாடப்பட்டு, பல மக்கள் வீடுகளற்ற அகதிகளாக மாறினர். மேலும், குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி நாட்டையே உலுக்கியது. இதனால் மணிப்பூர் மாநிலமே கலவர பூமியாக மாறியுள்ளது.
இந்த நிலையில், மணிப்பூர் மக்களிடம் அம்மாநில முதல்வர் பைரன் சிங் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். நாளை புத்தாண்டு தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், மணிப்பூர் முதல்வர் பைரங் சிங், வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசியதாவது, “இந்த ஆண்டு முழுவதும் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. கடந்த மே 3 முதல் இன்று வரை நடக்கும் சம்பவத்திற்கு மாநில மக்களிடம் நான் மன்னிப்பு கேட்கிறேன். பலர் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்துள்ளனர். பலர் வீடுகளை விட்டு வெளியேறினர். நான் வருத்தப்படுகிறேன். நான் மன்னிப்பு கேட்கிறேன். ஆனால் இப்போது, கடந்த மூன்று முதல் நான்கு மாதங்களில் அமைதியை நோக்கி முன்னேறி வருவதைக் கண்டு, 2025ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தில் இயல்பு நிலை திரும்பும் என நம்புகிறேன்.
மாநிலத்தில் உள்ள அனைத்து சமூகத்தினருக்கும் நான் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன். என்ன நடந்ததோ அது நடந்துள்ளது. நீங்கள் கடந்த கால தவறுகளை மன்னித்து மறந்துவிட வேண்டும். அமைதியான மற்றும் வளமான மணிப்பூரை நோக்கி புதிய வாழ்க்கையை தொடங்க வேண்டும்” என்று கூறினார்.