மலைத்தேனுக்கு ஆசைப்பட்டு குகையில் விழுந்து சுமார் 46 மணி நேரம் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்த இளைஞர் மீட்கப்பட்டுள்ளார். ஏழு ஜெலட்டின் குச்சிகளைப் பயன்படுத்தி, பாறைகளை வெடிவைத்துத் தகர்த்து அதிகாரிகள் அவரை மீட்டுள்ளனர்.
தெலங்கானா மாநிலம், காமா ரெட்டி மாவட்டத்தில் உள்ள ரெட்டி பேட்டையைச் சேர்ந்தவர் ராஜு. கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் அந்தப் பகுதியில் உள்ள சிங்கராயபள்ளி வனத்தில் உள்ள மலை ஒன்றின் மீது ஏறி தேன் சேகரிக்க முயன்றார் ராஜு. அப்போது தேன் கூடு இருந்த குகைக்குள் அவருடைய செல்போன் விழுந்துவிட்டது. அதை எடுக்க முயன்ற ராஜு, தலைகீழாக குகையில் விழுந்து சிக்கிக்கொண்டார். அவரைக் காணாமல் தேடிய குடும்ப உறுப்பினர்கள், காலையில் அவர் குகையில் சிக்கிக்கொண்டிருப்பதை அறிந்து பல்வேறு வகையான மீட்பு முயற்சிகளை எடுத்தனர். போலீசார், தீயணைப்பு படையினர் ஆகியோரும் அவரை மீட்க முயற்சி செய்தனர். ஆனால், அவரை மீட்க இயலவில்லை.
இந்நிலையில், ஜேசிபி, ஹிட்டாச்சி போன்ற இயந்திரங்கள் மூலம் பாறைகளை நகர்த்தி அவரை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மிகவும் கனமான பாறைகளுக்கு இடையே உள்ள சிறிய குகைக்குள் அவர் சிக்கிக் கொண்டதால் அந்தப் பாறைகளை இயந்திரங்கள் மூலம் நகர்த்த இயலவில்லை. எனவே, வேறு வழியில்லாத நிலையில், ஏழு ஜெலட்டின் குச்சிகளைப் பயன்படுத்தி, பாறைகளை வெடி வைத்துத் தகர்த்து ராஜுவை அதிகாரிகள் மாலையில் மீட்டனர். உடனடியாக அவரை தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ராஜு உயிருடன் மீட்கப்பட்டது, அவருடைய குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.