சத்தீஸ்கர் மாநிலம், துர்க் பகுதியைச் சேர்ந்தவர் சேத்தன். இவரும், அந்த பகுதியில் வசித்த இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இருவருடைய தாயார்களும், காவல்துறையில் பணிபுரிந்து வந்துள்ளனர். இதற்கிடையில், அந்த பெண்ணின் தாயாருக்கு சுர்குஜா மாவட்டத்துக்கு பணி மாற்றம் கிடைத்திடவே, தாயுடன் சேர்ந்து அந்த பெண்ணும் துர்க் பகுதியில் இருந்து வெளியேறினார்.
சுர்குஜா பகுதிக்கு சென்ற அப்பெண், லுகேஷ் சாஹு என்ற நபரை கண்டு காதல் கொண்டுள்ளார். இருப்பினும், சேத்தன் அந்த பெண்ணுக்கு தொடர்ந்து செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வந்துள்ளார். ஆனால், அந்த பெண் எந்தவித பதிலும் அளிக்கவில்லை. இந்த நிலையில், கடந்த 24ஆம் தேதி அந்த பெண் தன்னுடைய அம்மாவோடு துர்க் பகுதிக்கு வந்துள்ளார். இதனை அறிந்த கொண்ட சேத்தன், அந்த பெண்ணிடம் தன்னை சந்திக்குமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு அந்த பெண் மறுத்ததால், அவரை சேத்தன் ஆபாச வார்த்தைகளை திட்டி தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார்.
இதில் மனமுடைந்த அந்த பெண், நடந்த சம்பவங்களை லுகேஷிடம் எடுத்துக் கூறியுள்ளார். இதைக் கேட்ட லுகேஷ், அந்த பெண்ணிடம் சேத்தனை சந்திக்குமாறு கூறியுள்ளார். லுகேஷின் அறிவுறுத்தலின் பேரில், அந்த பெண் தனது வீட்டருகே ஒரு இடத்திற்கு சேத்தனை வரவழைத்துள்ளார். சேத்தன் அந்த பெண்ணை சந்திக்கச் சென்றபோது, லுகேஷ் தனது நண்பர்களுடன் அங்கு சென்று அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றிய நிலையில், லுகேஷ் மற்றும் அவரது நண்பர்கள் சேத்தனை கட்டையைக் கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த சேத்தன், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த சேத்தன், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.