உலகம் முழுவதும் பல்வேறு கரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதனையொட்டி வெளிநாடுகளில் முதல் டோஸாக ஒரு தடுப்பூசியையும், இரண்டாவது டோஸாக ஒரு தடுப்பூசியையும் மக்களுக்கு செலுத்துவது தொடர்பாக ஆய்வுகள் நடந்து வருகின்றன. சில ஆய்வுகளின் முடிவுகளும் வெளிவந்துள்ளன.
இந்தியாவில் இதுபோன்று தடுப்பூசிகளை மாற்றி செலுத்திகொள்வது தொடர்பாக இதுவரை எந்த ஆய்வும் நடைபெறாத நிலையில், கடந்த 11 ஆம் தேதி கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளை மாற்றி செலுத்திக்கொள்வது குறித்து ஆய்வு நடத்த இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அனுமதியளித்தார்.
இந்தநிலையில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளை மாற்றி செலுத்திக்கொள்வது மிகவும் தவறானது என சீரம் நிறுவன தலைவர் சைரஸ் பூனாவல்லா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், "தடுப்பூசிகளை மாற்றி செலுத்திக்கொள்வது மிகவும் தவறானது என நான் நினைக்கிறேன். அதுபோன்று மாற்றி செலுத்திக்கொள்வது பயனளிக்கும் என்பது எந்த ஆய்விலும் நிரூபிக்கப்படவில்லை. தடுப்பூசியை மாற்றி செலுத்திக்கொள்வது தேவையில்லை . எதாவது தவறாக நடந்தால், இரண்டு தடுப்பூசி தயாரிப்பாளர்களும் ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டுவோம். சீரம் நிறுவனம் அந்த தடுப்பூசி சரியில்லை என கூறும். அந்த நிறுவனம் எங்கள் தடுப்பூசியில் பிரச்னையுள்ளது என தெரிவிக்கும்" என தெரிவித்துள்ளார்.