இந்தியாவில் முஸ்லீம் மக்கள் குறிவைத்து தாக்கப்படுவதாக இஸ்லாமிய நாடுகள் வைத்துள்ள குற்றச்சாட்டிற்கு இந்திய வெளியுறவுத்துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அண்மையில் பாஜக செய்தித் தொடர்பாளராக இருந்த நூபுர் சர்மா முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் தெரிவித்திருந்த கருத்து அம்மதத்தைப் பின்பற்றுவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. பாஜக செய்தித் தொடர்பாளரின் சர்ச்சை பேச்சால் கான்பூரில் கலவரம் வெடித்தது. இந்திய தயாரிப்பு பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என அரபு நாடுகளில் உள்ள இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் நுபுர் ஷர்மா பாஜகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து பாஜக எந்த மதத்திற்கும் எதிரான கட்சி அல்ல என அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.
இந்த சர்ச்சை பேச்சு குறித்து குவைத், ஈரான், கத்தார், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் இந்தியத் தூதரகத்திடம் விளக்கம் கேட்டன. வெளியானது தனிப்பட்ட நபர்களின் கருத்து எனவும் சர்ச்சை கருத்தை வெளியிட்டவர்கள் நீக்கப்பட்டுவிட்டனர் எனவும் இந்திய வெளியுறவுத்துறை விளக்கமளித்திருந்தது. அதனைத் தொடர்ந்து இந்தியாவில் இஸ்லாமிய மக்கள் குறிவைத்து தாக்கப்படுவதாக 57 நாடுகளை உள்ளடக்கிய இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகள் ஐ.நாவிடம் முறையிட்ட நிலையில், அதற்கும் இந்திய வெளியுறவுத்துறை தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. 'பிரிவினை நோக்கத்தோடு தவறான கருத்துக்களை திட்டமிட்டு பரப்புவது வேதனை தருவதாக' இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.