அந்நிய நேரடி முதலீட்டை இதுவரை இல்லாத அளவிற்கு ரூ. 7 லட்சம் கோடியாக உயர்த்துவதற்கான திட்டத்தை மத்திய அரசு தயார் செய்து வருவதாக மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, டெல்லியில் நடைபெற்ற சர்வதேச தொழில் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
கடந்த 21-ம் தேதி அந்நிய நேரடி முதலீடு கடந்த ஆண்டைவிட இந்த நிதியாண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 7% குறைந்துள்ளதாக மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
2017-2018 நிதியாண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 35.94 பில்லியன் அமெரிக்க டாலரை இந்தியா அந்நிய முதலீடாக பெற்று இந்தது.
அதே 2018-2019 நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 33.49 பில்லியன் அமெரிக்க டாலரை முதலீடாக பெற்றுள்ளது. இது கடந்த நிதியாண்டைவிட 7% குறைவு என மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் கடந்த 21-ம் தேதி தெரிவித்திருந்தது.
இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற சர்வதேச தொழில் மாநாட்டில் கலந்துகொண்ட மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, 2017-18 நிதி ஆண்டில் மொத்த அந்நிய நேரடி முதலீடு 61 பில்லியன் டாலராக இருந்தது. இதை விரைவில் 100 பில்லியன் டாலராக உயர்த்த திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றனத் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவுடன் வைர இறக்குமதியைச் செய்ய இந்தியா திட்டமிட்டிருக்கிறது. அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதன்படி இந்தியாவுக்கு மூலப் பொருட்கள் கிடைப்பதும், அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதும் சாத்தியமாகும். இதுபோன்ற பல திட்டங்களின் மூலம் பிற உலக நாடுகளுடன் இந்தியா இணைந்து வர்த்தகம் செய்து வளர்ச்சியை நோக்கி நகரும் என்றும் மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.