ஜம்மு காஷ்மீர், கிஷ்த்வார் பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 3.5 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் இன்று காலை 8:53 மணிக்கு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை. மேலும், இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் மக்கள் அச்சமடைந்து வீதியில் தஞ்சமடைந்தனர்.
முன்னதாக ஆப்கானிஸ்தானின் ஹிந்துகுஷ் பிராந்தியத்தில் கடந்த 11 ஆம் தேதி மதியம் 02.50 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியாவின் டெல்லி, ஜம்மு காஷ்மீர், ஹரியானா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களிலும் நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதேபோன்று பாகிஸ்தானின் லாகூர், இஸ்லாமாபாத் உள்ளிட்ட இடங்களிலும் நில நடுக்கம் உணரப்பட்டது.
மேலும், ஜப்பான் நாட்டின் மேற்குப் பகுதியில் கடந்த 1 ஆம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.6 புள்ளிகளாகப் பதிவான இந்த நிலநடுக்கம் ஹோன்சு பகுதி அருகே அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கமாக ஏற்பட்டது. இதனால், வீடுகள் குலுங்கியதால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். 150க்கும் மேற்பட்ட முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 62 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டன. அதே சமயம் கடந்த சில நாட்களாக ரஷ்யா, மியான்மர், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.