![ss](http://image.nakkheeran.in/cdn/farfuture/TgC_ikscI28lhGqGbNjrUJ9toEtdP-pjopeVXDUw7Mg/1605851412/sites/default/files/inline-images/fsdffd.jpg)
ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய மேவாலால் சவுத்ரி பீகார் மாநிலத்தின் கல்வி அமைச்சராக பொறுப்பேற்றது விமர்சனங்களை எழுப்பியிருந்த நிலையில், அவர் நேற்று பதவி விலகியுள்ளார்.
பீகார் மாநிலத்தில் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாகச் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க. கூட்டணியை எதிர்த்து காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிட்டன. இந்தியாவே பெரிதும் ஆவலாக எதிர்பார்த்த, இந்த தேர்தல் முடிவுகள் கடந்த வாரம் வெளியானது. இதில், 125 இடங்களில் பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இதனைத் தொடர்ந்து, பீகார் மாநிலத்தின் முதல்வராக ஏழாவது முறையாகப் பதவியேற்றார் நிதிஷ்குமார்.
நிதிஷ்குமாரின் அமைச்சரவையில் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டார் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் மேவாலால் சவுத்ரி. வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தராக சவுத்ரி பணியாற்றிய காலத்தில், உதவிப் பேராசிரியர் நியமனத்தில் ஊழல் செய்த விவகாரம், தேசியகீதம் தெரியாமல் விழித்த வீடியோ என அவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தன எதிர்க்கட்சிகள். இந்த சூழலில், நேற்று முதல்வரைச் சந்தித்து சுமார் அரைமணிநேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்திய அவர், பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பீகார் ஆளுநர் பாகு சவுகான், புதிய கல்வி அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மேவாலால் சவுத்ரியின் ராஜினாமாவை உடனடியாக ஏற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழல் குற்றச்சாட்டு காரணமாக இவர் கடந்த 2017ஆம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டு, பின்னர் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.