கொல்கத்தாவில் உள்ள "டம் டம்" மெட்ரோ ரயில் நிலையத்தில் காதல் ஜோடிகள் மெட்ரோவில் கடந்த திங்கள்கிழமை இரவு 10 மணியளவில் மெட்ரோ ரயிலில் பயணித்தபொழுது இருவரும் ஒருவரை ஒருவரை கட்டியணைத்தபடி இருந்துள்ளனர். இதைப்பார்த்த சகபயணிகள் அவர்கள் ரயிலிலிருந்து இறங்கிய பின்பு அவர்களை அறைந்தும், துன்புறுத்தியும், உதைத்தும் அவர்களை காயப்படுத்தியுள்ளனர். இதைப்பார்த்த சில இளைஞர்கள் இருவரையும் அவர்களிடமிருந்து மீட்டுக்கொண்டு சென்றுள்ளனர்.
இந்த நிகழ்வை ஒருவர் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதனைக் கண்ட சுமார் 50 கல்லூரி மாணவ, மாணவிகள் இந்த சம்பவத்தை எதிர்த்து டம் டம் மெட்ரோ ரயில் நிலையத்தின் முன்பு போராட்டம் நடத்தியுள்ளனர். அந்த காதல் ஜோடிகளுக்கு ஆதரவாகவும், மெட்ரோ காவல்துறையினரை எதிர்த்தும் கோஷங்களை எழுப்பியுள்ளனர்.
இதுகுறித்து மெட்ரோ காவல்துறையினர் கூறியது, "இந்த சம்பவம் குறித்து யாரும் இதுவரை எங்களிடம் வந்து புகார் அளிக்கப்படவில்லை. எங்கள் அதிகாரிகள் நடைமேடையில் உள்ள சி.சி.டிவி கேமராக்களை ஆய்வு செய்து பார்த்ததில் எந்தவொரு அறிகுறியுமில்லை அன்று டம்டம் மெட்ரோவிலிருந்த காவலரும் இதுபோன்ற சம்பவம் நடக்கவில்லை என்றார். ஆனால் எங்களிடம் வந்து புகார் அளித்தால் கண்டிப்பாக இதில் சார்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்".