உலகத்தின் எந்தவொரு நிறுவனமும், தங்களது லோகோவிற்கு மிகுந்த முக்கியத்துவத்தை வழங்கும். பிரபல நிறுவனங்கள், தங்களது லோகோ இன்றி எந்த பொருளையும் தயாரிக்காது. ஆனால் டெட்டால் நிறுவனம், கரோனா வீரர்களை கவுரவிக்கும் பொருட்டு தங்களது லோகோவையே நீக்கியுள்ளது.
லோகோ இருக்குமிடத்தில் கரோனா வீரர்களின் புகைப்படத்தை அச்சிட்டு டெட்டால் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. மேலும் அவர்கள் மக்களுக்கு உதவிய விதமும் அந்த டெட்டால் நிறுவன பாட்டில்களில் இடம்பெற்றுள்ளது. இந்தியா முழுவதும் கரோனா அலையின்போது மக்களுக்கு உதவிய நூறு பேரை தேர்ந்தெடுத்து அவர்களின் புகைப்படங்களையும், கதைகளையும் டெட்டால் அச்சிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து டெட்டால் நிறுவனத்தின் உரிமையாளரான ரெக்கிட் நிறுவனம், "இந்தக் கதைகள் பகிரப்படும் போது, அவை அவற்றைப் பார்ப்பவர்களுக்கு, மிகவும் தேவைப்படும் நம்பிக்கை உணர்வை அளிக்கும் என நம்புகிறோம். எனவே, ஒரு பிராண்டாக, டெட்டோலின் வரலாற்றில் முதல்முறையாக, கரோனா வீரர்களின் செயல்களைப் பகிர்ந்து கொள்ள எங்கள் லோகோவையே விட்டுவிட்டோம். இந்த கதைகள் நம் நாடு முழுவதும் நம்பிக்கையின் செய்தியை கொண்டு செல்லும் என்று நாங்கள் நம்புகிறோம்" என தெரிவித்துள்ளார்.