Skip to main content

யானை உயிரிழப்பில் ஏற்பட்ட புதிய சந்தேகம்... விசாரணையைத் தொடங்கிய வனத்துறை...

Published on 04/06/2020 | Edited on 04/06/2020

 

kerala elephant issue interrogation


கேரளாவில் யானை உயிரிழந்த விவகாரத்தில், காட்டுப்பன்றிக்கு வைக்கப்பட்ட வெடிமருந்து கலந்த பழத்தைச் சாப்பிட்டு யானை உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. 
 


கேரளாவின் அமைதிப் பள்ளத்தாக்கு தேசிய பூங்காவைச் சேர்ந்த 15 வயதான கருவுற்ற பெண் யானை உணவுத் தேடி மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்துக்குச் சென்ற போது, வெடிமருந்து வைக்கப்பட்ட அன்னாசிப்பழத்தைச் சாப்பிட்டு படுகாயமடைந்து உயிரிழந்தது. யானையின் வாயில் அந்த வெடிமருந்து நிரப்பப்பட்ட பழம் வெடித்துள்ளது. இதனால், வாய் மற்றும் தும்பிக்கை பகுதிகளில் பலத்த காயமடைந்த அந்த யானை பற்களையும் இழந்துள்ளது.

இந்த வெடியினால் படுகாயமடைந்த அந்த யானை வலி தாங்கமுடியாமல் அங்குள்ள வெள்ளையாறு ஆற்றில் இறங்கி தண்ணீர் குடித்துள்ளது. மேலும், அதன் பின் மூன்று நாட்களாக அந்த ஆற்றை விட்டு அந்த யானை வெளியே வரவே இல்லை என்கின்றனர் வனத்துறையினர். காயமடைந்த அந்த யானையை மீட்டு சிகிச்சையளிக்க முயற்சித்த வனத்துறையினர், இரண்டு கும்கி யானைகளின் உதவியோடு அதனை வெளியே கொண்டு வர முயன்றுள்ளனர். ஆனால் அந்த யானை வெளியே வரவில்லை. இறப்பதற்கு முன்னர் மூன்று நாட்கள் அந்த ஆற்றைவிட்டு வெளியே வராத அந்த யானை,  கடந்த 27-ஆம் தேதி மாலை 4 மணிக்கு யானை உயிரிழந்ததாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 

 


இந்தச் சம்பவம் நாடு முழவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளைக் கண்டறிய கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், அன்னாசிப் பழத்தில் வெடி வைத்திருந்தது பயிர்களைச் சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளைக் கொல்வதற்காக இருக்கலாம் என மலப்புரம் மாவட்ட வனத்துறையினர் சந்தேகம் அடைந்துள்ளனர். பொதுவாக இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், தங்களது பயிர்களைக் காட்டு விலங்குகளிடம் இருந்து காப்பாற்ற இரண்டு அடிக்கு முள்வேலி அமைப்பது வழக்கம். சிலநேரம் இதில் தப்பிக்கும் காட்டு விலங்குகளுக்கு விஷம் தடவிய அல்லது வெடிவைத்த பழம், காய்களை வைப்பதாகவும் சொல்லப்படுகிறது. எனவே, யானை உயிரிழப்புக்கு இதுபோன்ற ஒரு வெடி நிரப்பப்பட்ட பழம் காரணமாக இருந்திருக்கலாம் என்ற கோணத்திலும் அதிகாரிகள் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்