விவசாயிகள் போராட்டம் குறித்த கனட பிரதமரின் கருத்து தேவையற்றது என இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த சூழலில், இம்மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் கடந்த ஆறு நாட்களாக மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேசிய கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, “அமைதியான போராட்டக்காரர்களின் உரிமைகளைப் பாதுகாக்க கனடா எப்போதும் துணைநிற்கும் என்பதை நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன். பேச்சுவார்த்தை மூலம் முடிவு காண்பதை நாங்கள் நம்புகிறோம். எங்கள் கவலைகளை எடுத்துரைக்கும் விதமாகப் பல வழிகளில் இந்திய அதிகாரிகளை அணுகியுள்ளோம். நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவட்சா, "டெல்லி விவசாயிகள் போராட்டம் தொடர்பாக கனடா பிரதமர் தெரிவித்த தவறான கருத்துகளைக் கண்டோம். ஒரு ஜனநாயக நாட்டின் உள் விவகாரங்களில் இவ்வித கருத்துகள் தேவையற்றது” எனத் தெரிவித்தார்.